×

சோபா, ஏசியா போட்டு கொடுப்பாங்க - ஜெயக்குமாருக்கு மா.சு. கேள்வி
 

 

 கள்ள ஓட்டு போட்ட திமுக பிரமுகரை தாக்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 20 நாட்களுக்கு பின்னர் இன்று விடுதலையானார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ,  திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு சேடிஸ்ட், பாசிஸ்ட்.  ஹிட்லர் முசோலினியின் மறு உருவம் என கடுமையாக விமர்சித்தார் .   கள்ள ஓட்டு போடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.  கள்ள ஓட்டு போட்ட அந்த திமுக பிரமுகர் மீது செயின் பறிப்பு உள்ளிட்ட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஸ்டாலின்.   அரசியல் வெறுப்பு காரணமாக என் மீது பொய் வழக்குப் போட்டு 20 நாட்கள் சிறையில் அடைத்து விட்டார்கள் என்றார்.

 நான் 20 நாட்கள் சிறையில் இருந்து இருக்கிறேன்.   கள்ள ஓட்டு போட்ட அந்த திமுக நபர் 20 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டு நேற்றுதான் டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார்.   இதுபோன்ற ஒரு காரியத்திற்கு ஸ்டாலின் துணை போவது வேதனையான விஷயம் என்றார்.

 என்னை தீவிரவாதிகளை அடைக்கும் பூந்தமல்லி சிறையில் அடைத்தார்கள்.   20 நாட்கள் புழல் சிறையில் இருந்தேன்.  உயர்நீதிமன்றம் ஜாமீன் உத்தரவு வழங்கியும் சிறை நிர்வாகம் நேற்று என்னை வெளியே விடவில்லை.  7 மணிக்கு ஜாமீன் உத்தரவு வந்தவுடன் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் வெளியே விடவில்லை நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அரசின் உத்தரவை மட்டுமே மதித்த சிறை நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தை நாட இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 ஜெயக்குமாரின் இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.  சென்னை பட்டினம்பாக்கம் மீனவர் சமுதாய கூடத்தில் நடைபெற்று வரும் இருவத்தி நாலாவது மிக தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசிய போது,  சிறையில் தனக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருக்கிறார்.   சிறையில் சோபா, ஏசியா போட்டு கொடுப்பாங்க என்று பதிலளித்தார்.  குற்றம் செய்தவர்கள் உணரவேண்டும் என்பதற்காகத் தான் தண்டனை வழங்கி சிறையில் அடைக்கப் படுகிறது.   சந்தேகமிருந்தால் ஜெயக்குமாருக்கு தெரிந்தவர்கள் இரண்டு பேரை சிறைக்கு அனுப்பி சோதனை செய்து பார்க்கச் சொல்லுங்கள் என்றார்.