×

காங்கிரஸ் இல்லாமல் குடியரசு தலைவர் தேர்தலுக்கு வேட்பாளரை தேர்ந்தெடுப்பது நடக்காது.. மல்லிகார்ஜூன் கார்கே

 

எங்களிடம் கிட்டத்தட்ட 50 சதவீத வாக்குகள் இருப்பதால், காங்கிரஸ் இல்லாமல் எதிர்வரும் குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பது நடக்காது என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார்.

குடியரசு தலைவர் தேர்தலை முன்னிட்டு, எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்துவதற்காக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. குடியரசு தலைவர் தேர்தல் போட்டியில் நான் இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ள நிலையில், இந்த கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்தி இருந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: எங்களிடம் கிட்டத்தட்ட 50 சதவீத வாக்குகள் இருப்பதால், காங்கிரஸ் இல்லாமல் எதிர்வரும் குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பது நடக்காது. ஆனால், நாங்கள் இன்னும் ஒன்றாக போராட கூட்டத்துக்கு செல்வோம்.

ஏனெனில் நாங்கள் ஒற்றுமையை உடைக்க விரும்பவில்லை. பா.ஜ.க.வுக்கு எதிராக போராட விரும்புகிறோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் பல பெரிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நாங்கள் ஒற்றுமையையும் ஒருமித்த வேட்பாளரையும் விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.