×

தேர்தல் தோல்விக்கு நாங்கள் அனைவரும் பொறுப்பு, காந்தி குடும்பத்தை மட்டும் குறிப்பிடுவது சரியல்ல.. கார்கே

 

தேர்தல் தோல்விக்கு நாங்கள் அனைவரும் பொறுப்பு, காந்தி குடும்பத்தை மட்டும் குறிப்பிடுவது சரியல்ல என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார்.

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வி குறித்தும், தோல்வியால் ஏற்பட்டுள்ள மனச்சோர்விலிருந்தும் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை வெளியேற்றுவது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர்களான மணிஷ் திவாரி, கபில் சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட காங்கிரஸ் ஜி23 தலைவர்கள் குலாம் நபி ஆசாத் வீட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சந்தித்து பேசினர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சியை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். நாங்கள் அனைவரும் (தேர்தல் தோல்விக்கு) பொறுப்பு, காந்தி குடும்பத்தை மட்டும் குறிப்பிடுவது சரியல்ல. இதை (காங்கிரஸ் காரிய கூட்டத்தில்) பலர்  சொன்னார்கள்.

குலாம் நபி ஆசாத் கட்சியின் பல ஆண்டுகளாக இருக்கிறார், அவருக்கு எல்லாம் தெரியும். எனவே அவர் அங்கு முக்கியமானவர்களுடன் பேசினார். குலாம் நபி ஆசாத் சோனியா காந்தியை சந்தித்தார். கட்சியை ஒன்றாக வைத்திருப்பது குறித்து அவர் பேசியுள்ளார். இது ஒரு நல்ல அறிகுறி. கட்சியை வலுப்படுத்த விரும்புவதாக அவர் கூறினார். இது வரவேற்கத்தக்க நிலை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.