×

ஹெரால்டு ஹவுஸில் அமலாக்கத்துறை சோதனை.. எதிர்க்கட்சிகளை மிரட்டுவது சரியல்ல... மல்லிகார்ஜூன் கார்கே

 

டெல்லியில்  ஹெரால்டு நிறுவனத்துக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு, எதிர்க்கட்சிகளை மிரட்டுவது சரியல்ல என்று  மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டில், நேஷனல்  ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதில் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக  சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் பவன் குமார் பன்சால் உள்ளிட்ட காங்கிரஸின் முக்கிய தலைகளில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இந்த சூழ்நிலையில் அமலாக்கத்துறை நேற்று டெல்லியில் உள்ள  ஹெரால்டு அலுவலகங்களில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது. இதனை மத்திய அரசின் பழிவாங்கல் நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறுகையில், இது, வேண்டுமென்றே காங்கிரஸூக்கு இடையூறு விளைவிக்கும், அதன் புகழைக் கெடுக்கும் அரசியல் பழிவாங்கல். நமது அரசியல் சாசனப்படி, ஆளும் கட்சி என்ற முறையில், எதிர்க்கட்சிகளை மிரட்டுவது சரியல்ல. அதை காங்கிரஸ் பொறுத்துக் கொள்ளாது என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், ஹெரால்டு ஹவுஸ், பகதூர்  ஷா ஜாபர் மார்க் மீதான சோதனைகள் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸூக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதலின் ஒரு பகுதியாகும். மோடி அரசுக்கு எதிராக பேசுபவர்களுக்கு எதிரான இந்த பழிவாங்கும் அரசியலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். உங்களால் எங்களை அமைதிப்படுத்த முடியாது என பதிவு செய்து இருந்தார்.