மதச்சார்பற்ற கட்சிகளை தோற்கடிக்க முயற்சிக்கும் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.. கார்கே
எ.ஐ.எம்.ஐ.எம். கட்சி கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததையடுத்து, மதச்சார்பற்ற கட்சிகளை தோற்கடிக்க முயற்சிக்கும் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்று மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார்.
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் மகாராஷ்டிரா பிரிவு தலைவரும், மக்களவை உறுப்பினருமான இம்தியாஸ் ஜலீல் கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராஜேஷ் தோப்பே என் வீட்டுக்கு வந்தபோது, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸூடன் கூட்டணி வைக்க ஏ.ஐ.எம்.ஐ.எம். கூட்டணி வைக்க விரும்புவதாக அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
எங்களால் பா.ஜ.க. வெற்றி பெறுகிறது (எ.ஐ.எம்.ஐ.எம். வாக்குகளை பிரிக்கிறது) என்று முக்கிய கட்சிகள் எப்போதும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் நாங்கள் பா.ஜ.க.வின் பி அணி அல்ல. நாங்கள் கூட்டணிக்கு (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே கூறியதாவது:
காங்கிரஸூக்கு இதுவரை எந்த முன்மொழிவும் (கூட்டணி குறித்து) வரவில்லை. கூட்டணிக்கான வியூகம் கட்சிக்குள் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதச்சார்பற்ற கட்சிகளை தோற்கடிக்க முயற்சிக்கும் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் உள்ளது. பா.ஜ.க.வின் கட்டளைப்படி எ.ஐ.எம்.ஐ.எம். செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறுகையில், எ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எம்.பி. இம்தியாஸ் ஜலீலை நான் அடிக்கடி சந்தித்து வருகிறேன். அதற்காக அவர்களுடன் கூட்டணி அமைக்கிறோம் என்று அர்த்தமில்லை. எ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி அமைப்பதை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. மேலும், எ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பா.ஜ.க. இடையே ரகசிய கூட்டணி உள்ளது. நீங்கள் உத்தர பிரதேச தேர்தலில் பார்த்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.