ஹவுரா கலவரம்... பா.ஜ.க. செய்த பாவத்தால் சாமானிய மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?... மம்தா பானர்ஜி 

 
மம்தா பானர்ஜி

பா.ஜ.க. செய்த பாவத்தால் சாமானிய மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? என ஹவுரா கலவரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தின் சில பகுதிகளில் குறிப்பாக சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் உலுபெரியா சப்டிவிஷனில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் முகமது நபிகள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை மதியம் முதல் எதிர்ப்புகள் காணப்பட்டன. ஹவுராவின் உலுபெரியா சப் டிவிஷனின் அதிகார வரம்பிற்குப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் நிலையங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விதிக்கப்பட்ட செக்சன் 144 சிஆர்பிசி ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய படையினர்

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தில் பல பகுதிகளில் போராட்டம் நடப்பதால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர மத்திய படைகளை அனுப்ப வலியுத்தி மத்திய உள்துறை அமித் ஷாவுக்கு பா.ஜ.க. எம்.பி. சவுமித்ரா கான் கடிதம் எழுதினார். சவுமித்ரா கான் கடிதம் எழுதிய சில மணி நேரங்களுக்கு பிறகு முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்வினையாற்றியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது தொடர்பாக கூறுகையில், ஹவுரா மாவடடத்தில் நடந்த வன்முறைக்கு பா.ஜ.க.வே காரணம். பா.ஜ.க. செய்த பாவத்தால் சாமானிய மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும். ஹவுரா வன்முறைக்கு பின்னணியில் உள்ள சில அரசியல் கட்சிகள், கலவரத்தை தூண்ட முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.