×

ஹிட்லர்,  ஜோசப் ஸ்டாலின் அல்லது  முசோலினி ஆட்சியை விட பா.ஜ.க. ஆட்சி மோசமானது... மம்தா பானர்ஜி தாக்கு

 

ஹிட்லர்,  ஜோசப் ஸ்டாலின் அல்லது பெனிட்டோ முசோலினி ஆட்சியை விட பா.ஜ.க. ஆட்சி மோசமானது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்க  முதல்வரும்,  திரிணாமுல் காங்கிரஸின் தலைவியுமான மம்தா பானர்ஜி நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது: அடால்ப் ஹிட்லர்,  ஜோசப் ஸ்டாலின் அல்லது பெனிட்டோ முசோலினி ஆட்சியை விட பா.ஜ.க. ஆட்சி மோசமானது. ஜனநாயகத்தை பாதுகாக்க மத்திய அமைப்புகளுக்கு (சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை)  சுயாட்சி வழங்கப்பட வேண்டும்.

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மாநில விவகாரங்களில் தலையிட மத்திய அமைப்புகளை பயன்படுத்துகிறது.  இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை புல்டோசர் செய்கிறது. துக்ளக் ஆட்சி அமலில் உள்ளது. ஏஜென்சிகளுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும். மேலும் அவை எந்த அரசியல் தலையீடு இல்லாமல் பாரபட்சமின்றி செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரு வலுவான  அதேசமயம் காங்கிரஸ் இல்லாத ஒரு எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில்  மம்தா பானர்ஜி தீவிரமாக உள்ளார். இதற்காக அடிக்கடி சரத் பவார்  உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களுடன் மம்தா பானர்ஜி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.