×

பெகாசஸ் சாப்ட்வேரை மாநில காவல்துறைக்கு விற்பனை செய்ய ரூ.25 கோடி கேட்டாங்க.. மம்தா பானர்ஜி பகீர் தகவல்

 

ஐந்து ஆண்டுகளுக்கு முன் மாநில காவல்துறைக்கு பெகாசஸ் உளவு சாப்ட்வேரை விற்பனை செய்ய ரூ.25 கோடி கேட்டனர்.  ஆனால் நான் வேண்டாம் என்று நிராகரித்தேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கடந்த மாதம் மேற்கு வங்கத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் அனிர்பன் கங்குலி, மம்தா பானர்ஜி 2016ம் ஆண்டுக்கு ஆட்சிக்கு வந்ததில் இருந்து உளவு சாப்ட்வேரை பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில்  நேற்று முன்தினம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது:  என்னுடைய போன் ஒட்டு கேட்கப்படுகிறது. நாம் எதையாவது பேசினால் அவர்களுக்கு தெரிய வரும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், எனக்கும் பெகாசஸ் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் அதை வாங்கவில்லை. தனியுரிமையில் தலையிடுவதிலும், பேச்சு சுதந்திரத்தை தடுப்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்கள் பெகாசஸ் உளவு சாப்ட்வேரை விலைக்கு வாங்கி உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று பெகாசஸ் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது செய்தியாளர்களிடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: அவர்கள் (இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. குழுமம்) நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் எங்கள் காவல்துறையிடம் தங்கள் எந்திரத்தை (பெகாசஸ் உளவு சாப்ட்வேர்) விற்பனை செய்ய ரூ.25 கோடி கேட்டனர். இதனை (பெகாசஸ் உளவு சாப்ட்வேர்) அரசியல் ரீதியாக நீதிபதிகள் அல்லது அதிகாரிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் நான் அதை நிராகரித்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.