2020 டிசம்பரில் எடுத்த முடிவை செயல்படுத்தி இருந்தால் இந்த நிலை வந்திருக்காது.. காங்கிரஸ் தலைமையை சாடிய மணீஷ் திவாரி
2020 டிசம்பரில் சோனியா காந்தி இல்லத்தில் நடந்த கூட்டத்தின் ஒரு மித்த கருத்தை செயல்படுத்தி இருந்தால் இந்த (குலாம் நபி ஆசாத் போன்ற தலைவர்கள் வெளியேறியது) நிலை வந்திருக்காது என்று காங்கிரஸ் கட்சியின் தலைமையை அந்த கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கடந்த வெள்ளிக்கிழமையன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 50 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் பயணித்த குலாம் நபி ஆசாத் அந்த கட்சியிலிருந்து வெளியேறியது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், 2020 டிசம்பரில் சோனியா காந்தி இல்லத்தில் நடந்த கூட்டத்தின் ஒரு மித்த கருத்தை செயல்படுத்தி இருந்தால் இந்த (குலாம் நபி ஆசாத் போன்ற தலைவர்கள் வெளியேறியது) நிலை வந்திருக்காது என்று காங்கிரஸ் கட்சியின் தலைமையை மூத்த தலைவர் மணீஷ் திவாரி குற்றம் சாட்டினார். மணீஷ் திவாரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கட்சியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினோம். அந்த கடிதத்திற்கு பிறகு அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது.
காங்கிரஸூம் இந்தியாவும் ஒரே மாதிரியாக நினைத்தால், அவர்களில் ஒருவர் வித்தியாசமாக சிந்திக்கத் தொடங்கியதாக தெரிகிறது. 1885 முதல் இருந்த இந்தியாவுக்கும், காங்கிரஸூக்கும் இடையிலான ஒருங்கிணைப்பில் ஒரு விரிசல் தோன்றியதாக தெரிகிறது. சுய பரிசோதனை (காங்கிரஸ் கட்சிக்கு) தேவை. 2020 டிசம்பர் 20ம் தேதியன்று சோனியா காந்தியின் இல்லத்தில் நடந்த கூட்டத்தின் ஒரு மித்த கருத்து நிறைவேற்றப்பட்டிருந்தால், இந்த (தேர்தல் தோல்வி, குலாம் நபி ஆசாத் போன்ற தலைவர்கள் வெளியேறியது உள்ளிட்டவை) நிலை வந்திருக்காது என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.