சுகாதாரம், கல்வி குறித்து சிந்திக்கும் பிரதமர்தான் நாட்டுக்கு தேவை.. பிரதமர் மோடியை தாக்கிய மணிஷ் சிசோடியா
சுகாதாரம் மற்றும் கல்வி குறித்து சிந்திக்கும் பிரதமர்தான் நாட்டுக்கு தேவை என்று பிரதமர் மோடியை டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மறைமுகமாக தாக்கினார்.
டெல்லியின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் போில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று சோதனை நடத்தினர். சனிக்கிழமை காலையில்தான் சோதனை முடிவடைந்தது. டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 13 பேருக்கு எதிராக சி.பி.ஐ. லுக் அவுட் சுற்றறிக்கையை நேற்று வெளியிட்டது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா கூறியதாவது:
இன்று சி.பி.ஐ. லுக் அவுடன் சுற்றறிக்கை யாருக்கு எதிராக வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடி நினைத்து கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றுக்கு தீர்வு காணும் மற்றும் இந்தியாவை நம்பர் ஒன்னாக்க பாடுபடும் தலைவரை நாடு இன்று தேடிக்கொண்டிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலையும், மணிஷ் சிசோடியாவையும் பூஜ்ஜியமாக்குவதன் மூலம் அவர்கள் என்ன சாதிக்க முடியும்? சுகாதாரம் மற்றும் கல்வி குறித்து சிந்திக்கும் பிரதமர்தான் நாட்டுக்கு தேவை.
2024ம் ஆண்டில் பொதுமக்கள் அவர்களுக்கு (பா.ஜ.க.) பெரும் வாக்குறுதிகளை கேட்ட பிறகு லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள். 75 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில்தான் தற்போது இந்தியாவின் நிலை உள்ளது. வேலையில்லாத திண்டாட்டத்துக்கு நாடு தீர்வை தேடுகிறது என்பது அவர்களுக்கு (பா.ஜ.க.) புரியவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவை முதலிடத்தில் உருவாக்குவதற்கான வழிகளை கண்டுபிடிக்கும் இடத்தில், அவர்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) யாருடைய வீட்டில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.