×

மாநிலத்தில் நிர்வாகம் இல்லை ஆனால் ரிங்மாஸ்டர் இல்லாத சர்க்கஸ் உள்ளது.. முதல்வர் நிதிஷ் குமார் அரசை தாக்கி ஆர்.ஜே.டி.

 

பீகார் மாநிலத்தில் நிர்வாகம் இல்லை ஆனால் சர்க்கஸ் உள்ளது அதுவும் ரிங்மாஸ்டர் இல்லாதது என்று ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஷா தெரிவித்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அண்மையில் பெகுசராய் ரஜோடாவில் நடந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார். ஆளும் கூட்டணி கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் மாநில சட்டம் ஒழுங்கு நிலவரத்தை விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பீகாரின் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் மாநிலத்தில் அரசாங்கம் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மனோஜ் ஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பீகாரில் அரசு இல்லை. அங்கு சர்க்கஸ் நடப்பதை தேஜஸ்வி யாதவ் சரியாக சுட்டிக் காட்டினார். மேலும் சர்க்கஸில் ரிங் மாஸ்டர் இல்லை. சிங்கம் இங்கிருந்து அங்கு குதிக்கிறது. நடுவில் ஒரு ஜோக்கர் குதிக்கிறார். தற்போதைய சர்க்கஸால் பீகார் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மாநிலத்தில் மக்கள் மத்தியில் பீகார் அரசு நம்பகத்தன்மையை இழந்து விட்டது. நிர்வாக அதிகாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் சாமானியர்கள் பலியாகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். பீகாரில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமீபகாலமாக ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.