×

காரை ஏற்றி எங்களை கொல்லச்சொன்னார் அமைச்சர் பிடிஆர்-டிரைவரும் எங்கள் மீது காரை ஏற்ற.. பகீர் குற்றச்சாட்டு 

 

காரை ஏற்றி எங்களை கொல்லச்சொன்னார் அமைச்சர் பிடிஆர். அவரது டிரைவரும் காரை எங்கள்மீது ஏற்றி கொல்ல முயற்சித்தார் என்று மதுரை மாநகர காவல்  ஆணையரிடம் பாஜக நிர்வாகி  ராஜ்குமார் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாஜகவினரை பார்த்து தகாத வார்த்தைகளால் அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் திட்டியதால் அவர் காரை வழிமறித்து அவர் காரின் மீது செருப்பு வீசி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் பாஜகவினர்.  எதிர்ப்பை தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

 இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்வுகள் குறித்து பின்னர் சொல்கிறேன் என்று அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்லி இருக்கிறார்.  ஆனால் நேற்று என்ன நடந்தது? அமைச்சர் என்ன சொல்லித் திட்டினார்? என்பது குறித்து மதுரை மாநகர காவல் துறையில் மதுரை பாஜக மாவட்ட பொருளாளர் ஜி. ராஜ்குமார் அளித்துள்ள புகாரில்,    நேற்று நடந்த சம்பவத்தின் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 மதுரை மாநகர காவல்  ஆணையரிடம் ராஜ்குமார் அளித்திருக்கும் அந்த குற்றச்சாட்டில்,  ’’இன்றைய தினம்(13.8.2022) நண்பல் 12 மணி அளவில் எங்களது பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மதுரைக்கு வருகை புரிந்து காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லட்சுமணன் பூத உடல் விமான மூலம் மதுரை நிலையத்திற்கு கொண்டுவரப்படும் பொழுது வீர வணக்கம் ,அஞ்சலி செலுத்துவதற்காக எங்கள் மாநிலத் தலைவரும் அவருடன் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் ஆகியோர் தலைமையில் பாஜகவினர் 300 பேர் திரண்டு இருந்தனர்.

 முக்கிய பிரமுகர்கள் மட்டும் விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்பகுதியில் காத்திருந்தார்கள்.  அந்த சமயத்தில் அங்கு வந்த தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் எங்களது நகர், மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் அண்ணாமலை அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் , மரியாதை குறைவாகவும்,  கண்ணியக் குறைவாகவும் திட்டியதோடு அதிகாரிகளை பார்த்து,   ’இந்த பரதேசி பயலுகளுக்கு என்ன தகுதி உள்ளது?  யார் இவன்களை உள்ளே அனுமதித்தது? என்று சொல்லி திட்டினார்.   இதன் பின்னர் அதிகாரிகள் சமரசம் செய்து பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை மரியாதை செய்து அஞ்சலி செய்து கிளம்பிய பின் எங்களது தலைவர்களையும் உள்ளே அஞ்சலி செய்ய அனுமதித்தனர்.

அந்த  சூழ்நிலையில் விமான நிலையத்தை விட்டு வெளியே சென்ற பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்  காரினை பாஜகவினர் வழிமறித்தனர்.  உள்ளே நடந்த விஷயங்களை கேள்விப்பட்டு வெளியே நின்று கொண்டிருந்த சில தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் காரினை மறித்து எதிர்ப்பினை காட்டி உள்ளனர்.  

 அந்த சமயத்தில் காரினை எங்கள் தொண்டர்கள் மீது ஏற்றச் சொல்லி டிரைவரிடம் கத்தியதால்,  அவரது டிரைவரும் காரினை தொண்டர்கள் மீது ஏற்றிக்கொள்ள முயன்று உள்ளார்.  இரு தரப்புக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு காவல்துறையினர் எங்களது தொண்டர்கள் மீது தடியடி பிரயோகம் செய்து விரட்டி உள்ளனர். எங்களது கட்சிக்காரர்கள் காவல்துறையினரால் ஆண்கள், பெண்கள் என்கிற வித்தியாசம் இல்லாமல் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர்.  அமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் தூண்டுதலின்படியும் அவரின் கட்டளை படியும் காவல்துறையினர் மற்றும் திமுகவின் குண்டர்கள் எங்களது கட்சிக்காரர்களை கடுமையாக தாக்கி கொலை முயற்சி செய்துள்ளனர்.   ஆகையால் காவல் ஆணையர்  பி டி ஆர்  தியாகராஜன்,  திமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் போர்வையில் அந்த ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அமைச்சர் மீது சொல்லப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டு அதிரவைக்கிறது.