×

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட நட முடியாது - அமைச்சர் துரைமுருகன்

 


 உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி, தமிழ்நாட்டின் அனுமதியின்றி  கர்நாடாக அரசால் மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட நட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 காவிரியின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி செலவில்  மேகதாது எனும் இடத்தில்   புதிய அணை கட்ட கர்நாடக அரசு  முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும்   காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது  என வலியுறுத்தி  தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு  விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,   மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபடும் என கர்நாடக சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது தமிழக விவசாயிகள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்துயுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கல் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், “தமிழகத்தின் அனுமதியின்றி  கர்நாடக அரசால் மேகதாதுவில் ஒரு செங்கலை கூட நட முடியாது” என  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.  வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு எப்படி  உறுதியுடன்  இருக்கிறதோ, அதேபோல நமது நிலைப்பாட்டில் நாமும் உறுதியுடன் இருப்போம் என்று கூறினார்.

உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி தீர்ப்பாயம்  தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், காவிரி ஆற்றில் அணை உள்ளிட்ட எதுவும் கட்டக்கூடாது என உத்தரவிட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார். ஆகையால்  தமிழக அரசின் இசைவு இல்லாமல் கர்நாடக அரசால் மேகதாதுவில் ஒரு செங்கலை கூட நட முடியாது என்றும் இது கர்நாடக அரசுக்கும் நன்றாக தெரியும் என்றும் கூறினார்.  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தான் இறுதியானது  எனக் கூறிய துரைமுருகன்,  அதற்கு கீழ்படிந்து நடப்பது தான் இந்திய ஜனநாயகம் என்றும் குறிப்பிட்டார்.  ஒரு மாநிலமே நீதிமன்றத்தின்  தீர்ப்பை மதிக்க மாட்டோம் என்று கூறினால்,  பிறகு இந்தியாவில் ஒருமைப்பாடு எங்கே ஏற்படப்போகிறது? என்றார். மேலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில்   அவ்வளவு சுலபமாக சாய்ந்துவிடாது என தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.