×

மழை காலங்களில் தடையற்ற மின்விநியோகம் - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

 

மின் விநியோகம் பாதிக்கப்படாமல் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழகத்துல் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மின்விநியோகத்தில் எந்த பாதிப்பும் இன்றி சீரான மின் விநியோகத்தை வழங்க ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மழைகாலத்தை எதிர்கொள்ள அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ள எனவும் அவர் கூறினார்.  ஆனால் தமிழகத்தில் மழைக்காலம் என்பதால் அவ்வப்போது மின் நிறுத்தம் செய்யப்படும் நிலையில் நேற்று வியாழன், ஒரே நாளில் 143 இணைப்புகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்சாரம் தற்போது தடையின்றி வழங்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தை எதிர்கொள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் மின்கம்பங்களும் , 9000 மின்கம்பிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில் மின் தயாரிப்புக்கு தேவையான 10 முதல் 11 நாட்கள் வரையிலான நிலக்கரி கையிருப்பு உள்ளது. கடந்த ஆட்சியில் நிலக்கரி காணாமல் போனதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, துறை ரீதியாக அமைக்கப்பட்டிருந்த குழு, அறிக்கையை  சமர்ப்பித்துள்ளது. அதில், நிலக்கரி காணாமல் போனது உண்மைதான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்வாரிய காலிப்பணியிடங்களில் குறிப்பிட்ட பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாகவும் மீதமுள்ள பணியிடங்கள் மின்வாரியத்தின் மூலம் நேரடியாகவே நிரப்பப்படும்” எனக் கூறினார்.