முருகன் வேலோடு வந்தா நீங்க கோலோடு வர்றீங்களே..? அண்ணாமலைக்கு புகழேந்தி கேள்வி
முருகன் வேலோடு வந்தால் நீங்கள் கோலொடு வருகிறீர்களே என்று அண்ணாமலையை பார்த்து கேட்கிறார் பெங்களூரு புகழேந்தி.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பாஜகவினரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து திமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை குறைக்க வேண்டுமென்று அண்ணாமலை போராட்டம் நடத்துவது காமெடியாக இருக்கிறது. பெட்ரோல் டீசல் எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசுதான். இது சின்ன குழந்தைக்கு கூட தெரியும் என்றார் .
தொடர்ந்து பேசிய புகழேந்தி, செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்களை 200, 400, ஆயிரம் ரூபாய் என்று பிச்சை கேட்க வந்தவர்களைப் போல நடத்துகிறார் அண்ணாமலை. மோடியை பிரதமர் ஆக்கியது மக்கள் தான் என்றாலும் முக்கிய காரணமாக அமைந்தது வடமாநில ஊடகங்கள் தான் . அப்படி இருந்தும் ஊடகங்களின் அருமை தெரியாமல் இதுவரைக்கும் ஒரு வருத்தம் கூட தெரிவிக்காமல் இருக்கிறார் அண்ணாமலை. அவரை வன்மையாக கண்டிக்கிறேன்.
எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா எல்லோரும் பத்திரிகையாளர்களை மதித்தார்கள். தமிழிசை ,முருகன் கூட பத்திரிகையாளர்களிடம் கண்ணியம் காத்தார்கள். மனிதனை மனிதனாக மதிக்க பெரியார், அம்பேத்கார், கலைஞர் போன்றவர்களை படித்து அண்ணாமலை தெரிந்துகொள்ளவேண்டும் . அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலிலிருந்து அவர் விலகிக் கொள்ளலாம் என்று சொன்னவர் , மாநில தலைவராக இருந்த முருகன் வேலோடு வந்தால் நீங்கள் அடிதடிக்காக கோலோடு வருகிறீர்களே என்று அண்ணாமலையைப் பார்த்து கேட்டிருக்கிறார் புகழேந்தி.