×

குழப்பமான மனநிலையில் கே.டி. ராம ராவ்.. தலித்துக்களை ஏமாற்றி விட்டார் சந்திரசேகர் ராவ்.. பா.ஜ.க. குற்றச்சாட்டு

 

அமித் ஷாவை பொய்யர் என்று கூறியிருப்பது கே.டி. ராம ராவின் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துகிறது என தெலங்கானா பா.ஜ.க.வின் துணை தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். பயம் காரணமாக டி.ஆர்.எஸ். தலைவர் 370வது பிரிவை நீக்குவதை எதிர்த்தார். நாங்கள் ஏ.ஐ.எம்.ஐ.எம். அல்லது டி.ஆர்.எஸ். பற்றி பயப்படவில்லை. மோடி 370வது பிரிவை நீக்கி விட்டார். தெலங்கானா உதயத்தை கொண்டாடுவதாக கே.சி.ஆர். உறுதியளித்தார். ஆனால் அவர்கள் இப்போது கொண்டாடுகிறார்களா? ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு பயந்து கொண்டாடவில்லை,நாம் தெலங்கானா உதய தினத்தை கொண்டாடுவோம். டி.ஆர்.எஸ். கட்சியின் சின்னம் கார், காரின் ஸ்டீயரிங் எப்போதும் உரிமையாளர் அல்லது டிரைவரின் கையில்தான் இருக்கும். ஆனால் டி.ஆர்.எஸ். கட்சியின் கார் ஸ்டீயரிங் அசாதுதீன் ஓவைசியிடம் உள்ளது.  தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசாங்கம் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டினார். 

அமித் ஷாவின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராம ராவ், அமித் ஷாவை கடுமையாக சாடினார். மேலும், அவர் அமித் ஷா அல்ல, ஒரு பொய்யர் பாட்ஷா. அவர் பேசியதில் ஒன்று கூட உண்மை இல்லை என கே.டி. ராம ராவ் தெரிவித்தார். இந்நிலையில், கே.டி. ராம ராவை தெலங்கானா பா.ஜ.க.வின் துணை தலைவர் என்.வி.எஸ்.எஸ். பிரபாகர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். என்.வி.எஸ்.எஸ். பிரபாகர் கூறியதாவது: அமித் ஷா அடிமட்டத்தில் இருந்து வளர்ந்தார். அவர் சாதாரண தொண்டராக இருந்து நாட்டின் உள்துறை அமைச்சராக உயர்ந்தார். அவர் வெகுஜன மனிதர்.

அவரை (அமித் ஷா) பொய்யர் என்று அழைப்பது கே.டி. ராம ராவின் குழப்பமான மனநிலையை காட்டுகிறது. தலித்துக்களுக்கு 3 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை கே.சந்திரசேகர் ராவ் செயல்படுத்தவில்லை என்று அமித் ஷா மிகக் தெளிவாக கூறினார். இது பொய்யல்ல, சட்டப்பேரவை பதிவேட்டில் உள்ளது, தலித்துக்களை ஏமாற்றி விட்டார் கே.சி.ஆர். மற்றொரு விஷயம், தொற்றுநோய் மற்றும் இயற்கை பேரிடர்களின் போது பசல் பீமா மற்றும் ஆயுஷ்மான் பாரத் ஆகியவற்றை செயல்படுத்தாதது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.