பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து முதுகில் குத்தி விட்டது.. தேசியவாத காங்கிரஸை குற்றம் சாட்டிய காங்கிரஸ்..
மாவட்ட கவுன்சில் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து, காங்கிரஸின் முதுகில் காங்கிரஸ் குத்தி விட்டது என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் கோண்டியா மாவட்ட கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்தது. பா.ஜ.க.வை சேர்ந்த பங்கஜ் ரஹங்டேல் தலைவராகவும், தேசியவாத காங்கிரஸின் யஷ்வந்த் குன்விர் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதேசமயம் அந்த தேர்தலில் காங்கிரஸின் உஷா மெண்டே தோல்வியடைந்தார். இது தொடர்பாக மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறியதாவது: கடந்த இரண்டரை ஆண்டுகளில், எங்கள் கட்சியினர் சிலரை தேசியவாத காங்கிரஸ் தன் பக்கம் இழுத்தது. கோண்டியா மாவட்ட கவுன்சில் தேர்தலுக்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தது.
நமக்கு எதிரி வேண்டுமானால், எதிரியாக இருப்பவர் பகிரங்கமாக இருக்க வேண்டும். நம் அருகில் இருக்கும்போது, அவர்கள் நம் முதுகில் குத்தினால் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும். நாங்கள் இதை (தேசியவாத காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி) எங்கள் தலைமையுடன் விவாதிப்போம். அவர்கள் (காங்கிரஸ் தலைமை) எங்களிடம் சொல்வதை நாங்கள் செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.