×

இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத்

 

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என இருவரும் மாறி மாறி கடுமையான விமர்சனங்களை செய்து வருகின்றனர். 

இந்த சூழலில் இன்று நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. ஊரகப் பகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் சுயேட்சையாக மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.
அதே சமயத்தில் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி ஆகிய இடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிட முடியும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி சார்பாக போட்டியிடும் உறுப்பினர்களை அங்கீகரித்து பார்ம் 6 கடிதம் வழங்கும். இந்தக் கடிதத்தை பெற்றவர்கள் தான் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பாக கட்சி சின்னத்துடன் போட்டியிட முடியும்.

கடந்த சில ஆண்டுகளாக அதிமுக சார்பாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  இணைந்து கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சியின் அங்கீகாரம் கடிதம் மற்றும் கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கான அனுமதி கடிதம் வழங்கி வந்தார்கள்.இதனால் நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில்  அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் யாரும் போட்டியிட முடியாத நிலையில் சுயேட்சையாக போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரியபாளையம் பகுதியில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “ இரட்டை இலை சின்னத்தை முடக்குவது தான் பிஜேபியின் லட்சியம், இரட்டை இலை சின்னத்தை முடக்கி அங்கே பாஜக அமர முயற்சிக்கிறது. டெல்லி எஜமானர்கள் அனுமதியோடு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி குறைந்த விலைக்கு குத்தகைக்கு எடுத்துள்ளார். பிஜேபி மாநில கட்சிகளை வாழ விட்டதாக வரலாறு இல்லை, இதற்கு எடப்பாடி பழனிசாமி பலியாகி உள்ளார். பல்லாயிரம் கோடி கொள்ளையடித்த பணத்தில் பொதுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் கொம்பு சீவி கட்சியை உடைக்க முயற்சி. அழிந்து வரும் அதிமுகவை ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவராலும் காப்பாற்ற முடியாது” எனக் கூறினார்.