×

"சொகுசு வாகனங்களில் உலா வருவது தான் சாதனையா?" - தமிழிசையை சீண்டிய நாராயணசாமி!

 

புதுச்சேரியின் 15ஆவது சட்டப்பேரவையின் 2ஆவது கூட்டம் இன்று கலாஇ 9.30 மணிக்கு தொடங்கியது. அடுத்த மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. அதன் முன்னோட்டமாக இன்று முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவை சாதாரண கூட்டமாக ஒரு நாள் மட்டும் நடைபெற்றது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க ஒரு வார காலம் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்றனர். ஆனால் அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.

இச்சூழலில் இதனை விமர்சித்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஆளுநர் உரையோடுதான் ஆரம்பிக்க வேண்டும். அதை மாற்றி, ஒரு நாள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தியது சரியல்ல. முதல்வர் ரங்கசாமி கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆட்சி அமைந்து 9 மாதங்களாகியும் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளுக்கு முதல்வர் சென்று ஆய்வுக் கூட்டம் நடத்தவில்லை. புதுவை அரசுடன் இணக்கமாக உள்ள ஆளுநர், மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து ஏன் நிதி பெற்று தரவில்லை? 

ஆளுநர் மற்றும் ஆட்சியாளர்கள், வளர்ச்சி திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு சொகுசு வாகனங்கள் வாங்கி உலா வருகின்றனர். இதுதான் ஆட்சியின் சாதனையா? புதுவை அரசு 2021- 22 பட்ஜெட்டில் அறிவித்த ரூ.9,900 கோடியில் இதுவரை 40 சதவீதம் மட்டுமே செலவு செய்துள்ளது. நடப்பாண்டிற்கான நிதி நிலையை நிறைவு செய்ய இன்னும் 40 நாட்கள் மட்டுமே இருக்கிறது. எஞ்சிய 40 நாட்களில் எப்படி 100 சதவீத நிதியை செலவு செய்ய முடியும்? புதுவை நிதிநிலை சம்பந்தமாக வெள்ளை அறிக்கையை முதல்வர் வெளியிட வேண்டும்” என்று பேசியுள்ளார்.