×

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யுங்கள்! தமிழிசைக்கு நாராயணசாமி அட்வைஸ்

 

தமிழக அரசு விஷயங்களில் மூக்கை நுழைப்பேன் என தமிழிசை பேசுவது அழகல்ல, அரசியல் செய்ய விரும்பினால், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் செய்யலாம் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்தார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “ஆளுநர்களுக்கு அரசு முடிவுகளில் தலையிட அதிகாரம் இல்லை. ஆளுநர், துணைநிலை ஆளுநர் ஆகியோருக்கு தனிப்பட்ட கருத்துகள் இருக்கலாம். அதை பொதுவெளியில் பேசுவது அழகல்ல. ஆனால் தமிழக ஆளுநர் ரவியும், துணைநிலை ஆளுநர் தமிழிசையும் இதை தொடர்ந்து செய்கின்றனர். மக்களால் தேர்வான அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றுதான் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. அதை தமிழக, புதுச்சேரி ஆளுநர்கள் கேட்க மறுக்கின்றனர். தெலங்கானா ஆளுநர் மாளிகையில் நவம்பர் மாதத்தில் எந்த நாளில் மக்கள் கேட்கும் நிகழ்வை நடத்துவதாக தெரிவித்தால் அதை நேரில் பார்த்து உறுதி செய்ய விரும்புகிறேன். என் சவாலை ஏற்று தேதியை ஆளுநர் தமிழிசை தெரிவிப்பாரா? குறை கேட்கும் நிகழ்வை நடத்தினால் அவர் ஆளுநர் மாளிகையில் தங்கியிருக்க முடியாது. 

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் அவரை விரட்டியடிப்பர். முக்கியமாக தமிழக அரசு விஷயங்களில் மூக்கை நுழைப்பேன் என தமிழிசை பேசுவது அழகல்ல. அரசியல் செய்ய விரும்பினால், தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு அரசியல் செய்யலாம். புதுச்சேரி தலைமைச்செயலகத்தில் நடந்த அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கட்சித்தலைவரை பங்கேற்க அனுமதிக்க யார் அதிகாரம் அளித்தது என கேள்வி எழுகிறது. இது மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற முருகன் எடுத்த ரகசிய காப்பு பிரமாணத்துக்கு எதிரானது.அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கட்சித்தலைவர் பங்கேற்புக்கு மத்திய இணை அமைச்சர் முருகன், முதல்வர் ரங்கசாமி, தலைமைச்செயலர் ராஜீவ் வர்மா ஆகிய மூவர்தான் பொறுப்பு.


இவ்விவகாரத்திஸ் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியதற்காக மத்திய அமைச்சர் முருகன் பதவி விலகவேண்டும். தலைமைச்செயலர் பதவி நீக்கம்செய்யப்படவேண்டும். முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். புதுச்சேரியில் நடைபெறும் இரட்டை ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி இருந்தாலும், அவர் போட்டுள்ள சட்டை பாஜகவுக்கு சொந்தம். அவர் பாஜகவுக்கு அடிமையாகிவிட்டார். சட்டப்பேரவைத்தலைவர் செல்வம் பாஜக கூட்டங்களில் பங்கேற்று விதிமீறி செயல்படுவதால் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். மதுபான ஆலைகள் புதிதாக அமைய பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ள சூழலில் ரூ. 90 கோடி லஞ்சம் வாங்கிய புகார் தொடர்பாக முதல்வர் ரங்கசாமி வாய் திறப்பாரா?” என்று கேள்வி எழுப்பினார்.