×

சிவாஜியின் நிலத்தில் அவுரங்கசீப்பின் சமாதி இருக்க வேண்டிய அவசியம் என்ன?.. ராஜ் தாக்கரே கட்சி

 

சத்ரபதி சிவாஜியின் நிலத்தில் அவுரங்கசீப்பின் சமாதி இருக்க வேண்டிய அவசியம் என்ன? கல்லறையை இடிக்க வேண்டும் என மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா (எம்.என்.எஸ்.) கோரியுள்ளது.

மகாராஷ்டிராவில் மசூதிகளில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 2022 மே 3ம் தேதிக்குள், மசூதிகளில் உள்ள ஒலி பெருக்கிகளை அகற்றாவிட்டால், மசூதிகளுக்கு முன் ஒலி பெருக்கிகளை வைத்து ஹனுமன் கீர்த்தனைகளை இசைப்போம் என எச்சரிக்கை செய்தனர். இந்த விவகாரத்தில் பல நூறு மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிராவில் ஒலி பெருக்கிகள் விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அவுரங்க சீப் கல்லறை விவகாரம் தற்போது பூதகரமாக கிளம்பியுள்ளது. அவுரங்கசீப் கல்லறை விவகாரத்துக்கு அடித்தளம் அமைத்தவர் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி. கடந்த சில தினங்களுக்கு முன், அசாதுதீன் ஓவைசி அவுரங்கபாத் மாவட்டத்தில் உள்ள அவுரங்கசீப் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வந்தார். இதனை மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சி கண்டித்துள்ளது. நவி மும்பையின் எம்.என்.எஸ். தலைவர் கஜனன் காலே, அவுரங்கசீப்பின் சமாதியை பார்வையிட்ட ஓவைசி மீது மகாராஷ்டிரா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்கபடாவிட்டால் எம்.என்.எஸ். இந்த விஷயத்தை தனது கைகளில் எடுக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில நேற்று கஜனன் காலே டிவிட்டரில், சிவாஜியின் நிலத்தில் (மகாராஷ்டிரா) அவுரங்கசீப்பின் சமாதி இருக்க வேண்டிய அவசியம் என்ன? சமாதி அழிக்கப்பட்டால் இந்த (அவுரங்கசீப்பின்) சந்ததியினர் இங்கு வந்து தலை குனிந்து அஞ்சலி செலுத்த மாட்டார்கள். பாலா சாகேப் கூறியதை நீங்கள் பின்பற்ற வேண்டாமா? அவுரங்காபாத் பெயரை மாற்றுவது குறித்து உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் (உத்தவ் தாக்கரே) ஏற்கனவே மாற்றிவிட்டீர்கள் என தெரிவித்தார். இது தொடர்பாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் கூறுகையில், அவுரங்கபாத் காவல்துறை அச்சுறுத்தலை கையாளும் திறன் கொண்டது என பதில் அளித்தார்.