மேற்கு வங்கத்திற்கு புதிய ஆளுநர்- இல. கணேசன் விடுவிப்பு
மேற்கு வங்க மாநிலத்திற்கு புதிய ஆளுநராக ஆனந்த போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதை அடுத்து கூடுதல் பொறுப்பை கவனித்து வந்த இல. கணேசன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக ஜக்தீப் தங்கார் பதவி வகித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ஜக்தீப் தங்கார் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு, தேர்தலில் வெற்றி பெற்று , துணை குடியரசு தலைவராக உள்ளார். இதனால் அம் மாநிலத்தின் ஆளுநராக பணிபுரிய தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் இல. கணேசனுக்கு, மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநராக இருந்த ஜட்டி தங்காருக்கும் கடும் மோதல் போக்கு இருந்து வந்தது. ஆனால் தற்போது மம்தா பானர்ஜிக்கும் இல. கணேசனுக்கும் இணக்கமான போக்கு இருந்து வந்தது. சென்னையில் நடந்த இல.கணேசன் இல்ல விழாவிற்கு பானர்ஜிக்கு அழைப்பு விடுத்திருந்தார். மம்தா பானர்ஜியும் இந்த விழாவில் பங்கேற்றார்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் பொறுப்பு ஆளுநர் பதவியில் இருந்து இல. கணேசன் விடுவிக்கப்பட்டுள்ளார். சிவி ஆனந்த் போஸ் அம் மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சி.வி. போஸ் கேரளாவைச் சேர்ந்தவர். மாவட்ட ஆட்சியராக தனது சிவில் சர்வீஸ் பணியை தொடங்கியவர். மாநில அரசின் தலைமைச் செயலாளர் பதவி வரைக்கும் பணிபுரிந்து இருக்கிறார் . பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் நல்ல மதிப்பை பெற்று இருக்கும் அதிகாரி. பிரதமர் நரேந்திர மோடியின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முக்கிய மூளையாக இருந்தவர் . இவர் மேற்கு வங்கத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.