புதிய கட்சி -ஹிந்துஸ்தானி பெயர் :குலாம்நபி ஆசாத் பரபரப்பு
இதனால்தான் காங்கிரஸ் வளர முடியவில்லை என்று அக்கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேல் இருந்தவர் குலாம் நபி ஆசாத். ஜம்மு காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர் உட்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர். அவர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார்.
பாஜகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் புதிய கட்சியை துவங்குவதாக இருக்கிறார். இந்த நிலையில் டெல்லியில் இருந்து இன்று ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது . ஆதரவாளர்கள் நடத்திய பேரணி, பொதுக்கூட்டத்தில் பங்கேற்று குலாம் நபி ஆசாத் பேசிய போது, காங்கிரஸ் கட்சி சார்பாக சிறைக்கு செல்பவர்கள் பஸ்களில் செல்கின்றார்கள். அவர்கள் போலீஸ் டிஜிபி , கமிஷனர்களை அழைத்து தங்களது பெயரை எழுதிக் கொடுத்துவிட்டு ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு சென்று விடுகின்றார்கள். இதனால் தான் காங்கிரஸ் வளர முடியவில்லை என்றார்.
அவர் மேலும், காங்கிரஸ் நமது ரத்தத்தால் உருவாக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கம்ப்யூட்டர்களால், டுவிட்டர்களால் உருவாக்கப்படவில்லை என்பதே உண்மை என்றார். தொடர்ந்து காங்கிரஸ் குறித்து பேசிய குலாம் நபி ஆசாத், கட்சியில் சிலர் எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள் . அவர்ளை கம்ப்யூட்டர் சமூக வலைதளங்களில் மட்டுமே பார்க்க முடியும். இது போன்ற காரணங்களால் தான் களத்தில் காங்கிரசை பார்க்க முடியவில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சொன்னார்.
குலாம் நபி ஆசாத் தொடர்ந்து பேசியபோது, புதிய கட்சிக்கு என்ன பெயர் என்பதை குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. கட்சியின் கொடி, பெயர் குறித்து காஷ்மீர் மக்கள் முடிவு செய்வார்கள். அனைவரும் புரிந்து கொள்கின்ற வகையில் இந்துஸ்தானி பெயர் சூட்டப்படும் என்றார்.