அதிமுகவில் புதிய பொறுப்புகள்! இபிஎஸ் நாற்காலியில் உட்காரும் சண்முகம் - ஓபிஎஸ் நாற்காலியில் உட்காரும் நத்தம்
அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பொதுச்செயலாளர் என்ற பதவியை எடுத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளை உருவாக்கினார்கள் ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும்.
விரைவில் இந்த இரண்டு பதவிகளையும் காலி செய்து விட்டு மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை கொண்டு வந்து, தனது ஒற்றை தலைமையின் கீழ் அதிமுகவைக் கொண்டு வந்து விடுவார் எடப்பாடி பழனிச்சாமி என்று அப்போதே பலரும் சொல்லி வந்தனர் . அதற்கான காய்களை அவர் அப்போதிலிருந்து நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறார்.
தற்போது வரும் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று அவரும் அவரது தரப்பினரும் முடிவு செய்துள்ளார். இதை அடுத்து ஓ . பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியை பறிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அப்படி ஓ. பன்னீர்செல்வத்திடமிருந்து பொருளாளர் பதவி பறிக்கப்பட்டால் அந்த பதவியில் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. அந்தப் பதவியை நத்தம் விஸ்வநாதனுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும், தற்போது எடப்பாடி பழனிச்சாமி வகித்து வரும் தலைமை நிலைய செயலாளர் பதவியை சிவி சண்முகத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் என்றும், டி. ஜெயக்குமார் துணைப் பொதுச் செயலாளர் என்றும், நத்தம் விஸ்வநாதன் பொருளாளர் என்றும் , சி.வி சண்முகம் தலைமை நிலைய செயலாளர் என்றும், தமிழ் மகன் உசேன் அவை தலைவர் என்றும் , எஸ்.பி.வேலுமணி எதிர்க்கட்சித் தலைவர் என்றும், திண்டுக்கல் சீனிவாசன் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்றும் தற்போது முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த புதிய பொறுப்புகள் சில மாதங்களுக்கு மட்டுமே என்றும் தற்போது முடிவெடுத்து இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு பின்னர் பொறுப்புகள் மாற்றி அமைக்கப்படும் என்றும் ஆலோசனையில் முடிவெடுக்கப் பட்டிருக்கிறது.
அதிமுகவின் புதிய பொறுப்புகள் குறித்த மேற்கண்ட தகவல்களை அக்கட்சியின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் பகிர்ந்திருக்கிறார்.