×

ஐக்கிய ஜனதா தளத்தை காங்கிரஸூடன் இணைக்க பிரசாந்த் கிஷோர் விரும்பினார்... நிதிஷ் குமார் பகீர் குற்றச்சாட்டு

 

ஐக்கிய ஜனதா தளத்தை காங்கிரஸூடன் இணைக்கும்படி பிரசாந்த் கிஷோர் என்னிடம் கூறினார் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாருக்கும், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோருக்கும் இடையிலான மோதல் நீண்டு கொண்டே செல்கிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சியை காங்கிரஸூடன் இணைக்கும்படி பிரசாந்த் கிஷோர் என்னிடம் அட்வைஸ் செய்தார் என்று நிதிஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: நான்கைந்து ஆண்டுகளுக்கு முன், ஐக்கிய ஜனதா தளத்தை காங்கிரஸூடன் இணைக்கும்படி பிரசாந்த் கிஷோர் என்னிடம் கூறினார். அவர் தற்போது பா.ஜ.க.வுக்கு சென்று அதன்படி செயல்படுகிறார். பிரசாந்த் கிஷோருக்கு எந்த பதவியும் நான் வழங்கவில்லை. அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்.

இப்போது அவருடைய கருத்துக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். இது அவருக்கு நல்லது. அவருக்கு (பிரசாந்த் கிஷோர்) அங்கு (பா.ஜ.க.) பதவி கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். பீகாரில் நிதிஷ் குமார் அண்மையில் பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்து கொண்டு, காங்கிரஸ்  மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்து அம்மாநிலத்தில் 10வது முறையாக ஆட்சி அமைத்தார். இதனை பிரசாந்த் கிஷோர் கிண்டல் செய்தார் அது முதல் கிஷோருக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது.