பள்ளிகளில் இனி மதிய உணவில் சிக்கன்! ‘கோழிக்கறி அரசியல்’என எதிர்க்கட்சிகள் விமர்சனம்
தமிழ்நாட்டில் பள்ளிகளில் மதிய உணவில் முட்டை வழங்கப்படுகிறது. இதேபோன்று பல மாநில அரசுகள் பள்ளிகளில் மதிய உணவில் மாணவர்களுக்கு முட்டை வழங்கி வருகின்றன. 13 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் மதிய உணவில் முட்டைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் பல மாநிலங்களில் பள்ளிகளில் மதிய முட்டை வழங்க முடியாத நிலை இருக்கிறது.
அப்படி இருக்கும்போது மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளிகளில் மதிய உணவில் சிக்கன் மற்றும் பருவ கால பழங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. ஆளுங்கட்சிக்கும் பாஜகவுக்கும் மாநிலத்தில் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவில் சிக்கன் மற்றும் பருவ கால பலன்கள் வழங்கப்படும் என்றும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை நாலு மாதங்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அரசின் இந்த அறிவிப்புக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றன. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் கட்சி இந்த திட்டத்தை கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் மேற்கு வங்க கல்வி அமைச்சரோ, நிதி பற்றாக்குறையின் காரணமாக இந்த திட்டம் 4 மாதங்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறார். மாணவர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்க நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். எங்களின் சேமிப்பிலிருந்து மாணவர்களுக்கு கோழிக்கறி பருவகால பழங்கள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் . நான்கு மாதங்களுக்கான இந்த திட்டத்தை ஆண்டு முழுவதும் தொடர்ந்திட அதிக நிதி தேவைப்படும். எங்களிடம் அவ்வளவு நிதி இல்லை என்று கூறியிருக்கிறார்.
மேற்குவங்க பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், உருளைக்கிழங்கு, பருப்பு, காய்கறிகள், சோயாபீன், முட்டைகள் உள்ளிட்ட வழக்கமான மெனுவுடன் கூடுதலாக கோழிக்கறி மற்றும் பழங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்திற்காக கூடுதலாக 372 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா, மத்திய உணவு திட்டத்தில் சிக்கன், பழங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு திடீரென்று எண்ணம் வந்தது ஏன்? கிராமப்புற தேர்தலில் தனது கட்சி வெற்றி பெறாது என்பதை முதல்வர் புரிந்து கொண்டிருக்கிறார். அதனால் தான் கோழிக்கறி அரசியலை கையில் எடுத்திருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.