×

பொதுக்குழுவில் அவமதிக்கப்பட்ட ஓபிஎஸ்! விரட்டியடித்த தொண்டர்கள்

 

சென்னை வானகரம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் கூடியது. இதில் பங்கேற்பதற்காக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பிரச்சார வாகனத்தில் வந்திருந்தார். அரங்கத்தின் உள்ளே நுழையும் போதே, "ஓபிஎஸ் ஒழிக " "வெளியே போ " " துரோகி"  என தொண்டர்களை கோஷங்கள் எழுப்பினர். பின்னர், பொதுக்குழு மேடைக்கு ஓபிஎஸ் சென்று அமர்ந்த பின்னரும் , கோஷங்களும் கூச்சல்களும் தொடர்ந்தன. வைகைச்செல்வன், ஆர்.பி. உதயகுமார் என அமைதிகாக்க வலியுறுத்திய போதும் கோஷங்கள் தொடர்ந்தன.

பின்னர், பொதுக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்படாது என அறிவித்த பின்னர் அதிருப்தியடைந்த ஓபிஎஸ் தரப்பினர், புறக்கணித்து வெளியேறுவதாக அறிவித்தனர். அப்போதும் எதிர் கோஷங்கள் தொடர்ந்த நிலையில், மேடையில் நின்றவாரே தொண்டர்கள் அனைவரையும் ஓபிஎஸ் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்து சிலர் தண்ணீர் பாட்டில்களை வீசத்தொடங்க மேடையில் இருந்து ஓபிஎஸ் இறங்கிச் சென்றார். கூட்ட நெரிசலில் சிக்கிய அவரை, மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் மற்றும் காவலர்கள் பாதுகாப்பாக வாகனத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சில தொண்டர்கள் தகாத வார்த்தைகளால் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களை திட்டித்தீர்த்தனர். அத்தனையையும், கேட்டுக்கொண்டே ஓபிஎஸ் அமைதியாக தனது வாகனத்தில் புறப்பட்டு சென்றார். 

இதனிடையே எடப்பாடி பழனிசாமி வாகனம் நிற்க வேண்டும் என ஓபிஎஸ் வாகனத்தை வெளியே எடுக்கச் சொல்லி கூச்சலிட்டனர். இதனால், ஓபிஎஸ் வாகனம் அங்கிருந்து எடுத்து வெளியே நிறுத்தப்பட்டது. இந்த பரபரப்புகளுக்கு இடையே ஓபிஎஸ் வாகனத்தின் டயரும் அடையாளம் தெரியாத நபர்களால் பஞ்சர் செய்யப்பட்டது.