×

ஓபிஎஸ்-இபிஎஸ்-தினகரன் இணைகிறார்களா?

 

என்னதான் அடுத்த தேர்தலில் பாஜகதான் ஆட்சி  அமைக்கும் என்று அக்கட்சி தலைவர்கள் சொல்லி வந்தாலும், தற்போதைய சூழலில் அதிமுகவின் கூட்டணி பலத்தையே நம்பி இருக்கிறது பாஜக.   ஆனால், அதிமுகவோ ஏற்கனவே இரண்டாக பிரிந்து கிடக்கிறது.  இதில் மேலும் கட்சி உடைந்தால் அது தங்களுக்கு பாதகம் என்பதை உணர்ந்த பாஜக,  ஆரம்பம் முதலே அதிமுகவில் ஒற்றுமையை விரும்புகிறது. 

அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று சொன்னாலும் அதிமுகவினரின் ஒற்றுமையைத்தான் பாஜக விரும்புகிறது.  அதற்காகத்தான் சமரச முயற்சிகளையும் அவ்வப்போது எடுத்து வருகிறது.

அதிமுகவுடன் சசிகலாவையும், தினகரனையும் இணைத்துவிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில், ஓபிஎஸ் -இபிஎஸ் மோதலால் பாஜக அதிருப்தியில் இருந்து வருகிறது.
 
ஒருங்கிணைந்த அதிமுகவை வலியுறுத்த  தமிழக பாஜக தலைவர்களுக்கு பாஜக  மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது.   பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா கூட இதையே அறிவுறுத்தி இருக்கிறார்.

திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,   ’’அதிமுக கூட்டணியில் தினகரன் இருந்திருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது.   கடந்த தேர்தலில் தினகரன் தனித்து நின்றதால் 39 இடங்களில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது.   இதனை படிப்பினையாக கொண்டு அந்த கட்சித் தலைவர்கள் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்’’ என்று அறிவுறுத்தி இருக்கிறார்.  

 இந்த நிலையில் ஓபிஎஸ்சுடன் சேருவதற்கான வாய்ப்பே இனி இல்லை என்று பிடிவாதமாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்.  இதனால் அவர்  கடும் கோபத்தில் ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவையும் புறக்கணித்து விட்டு அவசர அவசரமாக சென்னை திரும்புகிறார். அதே நேரம் ஓபிஎஸ்க்கு டெல்லியில் இருந்து தொலைபேசி மூலம் முக்கிய தகவல்  வந்திருக்கிறது.

ஓபிஎஸ் வேறு புதிய நிர்வாகிகளை அறிவிக்கப்போகிறேன் என்று தனி அணி முயற்சியில் இருக்கிறார்.  ஆனால், ஓபிஎஸ்-இபிஎஸ்-தினகரன் மூவரும் இணையவேண்டும் என்று பாஜக நேரடியாகவே முயற்சிகளை மேற்கொண்டால்,  ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு வழிவகுக்குமா? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.