×

கொன்னு புதைச்சுடுவேன்னு மிரட்டுறார் ஓபிஎஸ் சகோதரர் - முனியாண்டி பரபரப்பு புகார்

 

 கொலை செய்து புதைத்து விடுவேன் என்று ஓ.  பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.  ராஜா மிரட்டுகிறார் என்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் முனியாண்டி என்பவர் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார் .  

அந்த புகாரில் தனக்கு சொந்தமான நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு நிலத்திற்கு உரிய பணத்தை தராமல் கடந்த 10 ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறார் ஓ. ராஜா. பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 தேனி மாவட்டத்தில் பெரிய குளம் அடுத்த வடுகப்பட்டி ஜெயந்தி நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி(வயது59).   இவருக்கு சொந்தமாக 83 சென்ட் நிலம் கொடைக்கானல் அடுத்த வில்பட்டி கிராமத்தில் இருக்கிறது.   இந்த நிலத்தை கடந்து 2010 ஆம் ஆண்டில் மகளின் திருமண செலவுக்காகவும் குடும்ப செலவுக்காகவும் விற்க முயன்றிருக்கிறார் .  அந்த நிலத்தை ஓ. ராஜா வாங்கிக் கொள்வதாக சொல்லி இருக்கிறார்.   40 லட்சத்திற்கு கிரையம் பேசி அவரது பினாமி கிருஷ்ணன் என்பவரின் பெயரில் பவர் எழுதி தர சொல்லி இருக்கிறார்.   முனியாண்டியின் மனைவி கிருஷ்ணனின் பெயருக்கு பவர் எழுதிக் கொடுத்திருக்கிறார்.  

 இதை அடுத்து நிலத்திற்கான பணத்தை கேட்டு வந்திருக்கிறார் முனியாண்டி.   பணம் அப்போது தருகிறேன் இப்போது தருகிறேன் என்று இழுத்தடித்து வந்திருக்கிறார். பலமுறை கேட்டுப் பார்த்தும் பணம் தர மறுத்துவிட்டதாகவும்,   படத்தைக் கேட்டால்  கொன்னு புதைச்சிடுவேன் என்று மிரட்டுவதாகவும்   புகாரில் முனியாண்டி தெரிவித்திருக்கிறார்.

 காவல்துறையிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் முதல்வர் தனிப்பிரிவுக்கு பல மனு போட்டு பார்த்து விட்டேன்.  ஆனால் ஓ .ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.   ஓ. ராஜா அந்த நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்ய முயன்று வருகிறார்.  அதை தடுத்து அந்த நிலத்தை தனக்கு மீட்டு தர வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.