×

ஈபிஎஸ் அணியினருக்கு பொறுப்பு வழங்கும் ஓபிஎஸ்! மீண்டும் சர்ச்சை

 

அரியலூர் மாவட்டத்தில் எடப்பாடியார் தலைமையில் உள்ள  அதிமுகவினரை  ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகளாக வெளியிட்டதை தொடர்ந்து அதிமுகவினரிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் அதிமுகவில் ஏற்கனவே பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்களை தங்கள் அணியின் நிர்வாகிகளாக நியமித்து ஓபிஎஸ் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் திருமானூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் ராசி.மனோகரன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஆகவும் இதேபோல் வெண்ணிலா, இந்திரா, ராசாத்தி, சேசு, சுசிலா தர்மதுரை,மகேந்திரன், முத்து காந்தி உட்பட பல எடப்பாடி ஆதரவாளர்களை ஓபிஎஸ் அணியின் பல்வேறு பொறுப்பு நிர்வாகிகளாக அறிவித்து பட்டியல் வெளியிடப்பட்டது.

இதை பார்த்து எம்ஜிஆர் நினைவு ஊர்வலத்திற்கு வந்த அதிமுகவினர்  அதிர்ச்சியடைந்து உடனடியாக அரியலூரில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு சென்று மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரனிடம் தங்களுக்கும் ஓபிஎஸ் தரப்பிற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது எனவும்,ஒபிஎஸ் தரப்பில் வெளிவந்த அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். நாங்கள் தொடர்ந்து உண்மையான தொண்டர்களை கொண்டுள்ள எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவில் நீடிப்போம் என உறுதி அளித்தனர். மேலும் எங்கள் ஒப்புதல் இல்லாமல் எங்களை நிர்வாகிகளாக நியமித்த ஓபிஎஸ் தரப்பு மீது தலைமை கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.