×

ஓபிஎஸ்  ஜானகி மாதிரி கிடையாது; அவர்  பசுந்தோல் போர்த்திய புலி -  ராஜன் செல்லப்பா

 

கசப்பை மறந்து எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்படலாம் என்று ஓபிஎஸ் அழைக்க எடப்பாடி பழனிச்சாமி அந்த அழைப்பை நிராகரித்து விட்டார். ஓபிஎஸ் உடன் செயல்பட முடியாது என்று அவரை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.  எடப்பாடியை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் ஓபிஎஸ் இன் அழைப்பிற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து  எடப்பாடி ஆதரவாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசிய போது,  வலிமைமிக்க தீர்ப்பினை கழகத் தொண்டர்கள் எடப்பாடியாருக்கு ஏற்கனவே வழங்கி விட்டார்கள்.   எடப்பாடி யார் பின்னால் 63 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் 2663 பொதுக்குழு உறுப்பினர்களில் அதிக மெஜாரிட்டியாக எடப்பாடியாரை இடைக்கால பொதுச்செயலாளர் என்று தேர்வு செய்துள்ளனர்.  ஆனால் சிலர் இடைக்காலத் தீர்ப்பை பெற்றுவிட்டு சில அறிக்கைகளை விடுகின்றார்கள்.  இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை.  மேல் முறையீடு உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

 அவர் மேலும்,   கசப்பை மறக்க வேண்டும் என்று சொல்கிறார் ஓபிஎஸ் .  ஆனால் திமுகவுடன் தொடர்பு வைத்தவர்களை எப்படி மறக்க முடியும்.  இனிய வசந்த காலம் என்கிறார் ஓபிஎஸ்.  திமுகவில் தொடர்பு உள்ளவர்களை எப்படி வசந்த காலம் என்று ஏற்க முடியும் .   இன்றைக்கு எடப்பாடி அதற்கு பின்னால் ஆடாமல் அசையாமல் வலுவோடு இந்த இயக்கம் இருக்கிறது.   திமுகவை எதிர்க்கக் கூடிய தலைமையாக எடப்பாடி யார் தலைமை இருக்கிறது.

 தீர்ப்பை மட்டும் வைத்துக் கொண்டு கட்சியை வளர்க்க முடியாது.   நீதிமன்றம் கட்சிகளை நடத்த முடியாது. ஓபிஎஸ் எடப்பாடியை அழைக்கிறார்.  அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று சொல்லுகிறார்.  அவருக்கு அழைப்பதற்கு எந்த தகுதியும் இல்லை . அவர் அழைத்தது தவறு.  கூட்டத்தலைமை என்று ஓபிஎஸ் சொல்கிறார். நாடாளுமன்ற வேட்பாளர்கள், சட்டமன்ற வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டது.   யாரும் கூட்டுத் தலைமையினை விரும்பவில்லை. இரட்டை தலைமையை ஏற்றுக்கொள்ள மனநிலையில் யாரும் இல்லை என்றார்.  

மேலும்,  எப்போது எல்லாம் தனக்கு சாதகமான தீர்ப்பு வருகிறதோ அப்போது எல்லாம் தென் மாவட்டங்களுக்கு செல்கிறார் ஓபிஎஸ்.   அவர் தென் மாவட்ட பகுதிகளை உரிமை கொண்டாட முயற்சி செய்கிறார்.    ஜானகி அம்மாள் புரட்சித்தலைவி  அம்மாவிடம் கட்சியை விட்டுக் கொடுத்தார்கள்.  ஆனால் ஓபிஎஸ் அப்படி கிடையாது அவர் பசுந்தோல் போர்த்திய புலி என்றார்.