×

ஓபிஎஸ் அதிமுகவின் பெயரை பயன்படுத்துவது தவறு;  அவர் அதிமுக அலுவலகம் வருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை - ஜெயக்குமார் தடாலடி

 

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் வருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் அமைச்சரும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளருமான ஜெயக்குமார்.

 அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி,  உடனடியாக அதிமுக தலைமை அலுவலகம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது .  அவர் இடைக்கால பொதுச் செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பான  வழக்குகளினால் உடனடியாக அதிமுக தலைமை அலுவலகம் செல்ல முடியாத நிலை இருந்தது.

 இந்நிலையில் 72 தினங்களுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அதிமுக தலைமை அலுவலகம் சென்றார் .  அவருக்கு கட்சி நிர்வாகிகள்,  கட்சியினர் திரண்டு வந்து பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.  

 இதை அடுத்து ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார் என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்திருந்தார்.  இதை அடுத்து ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி சென்னை டிஜிபி அலுவலகத்தில் கோரிக்கை அளிக்கப்பட்டிருந்தது.   ஆனால் அந்த கோரிக்கையை காவல்துறை நிராகரித்தது.   

 அதிமுக தலைமை அலுவலகம் செல்வதற்கு நீதிமன்றம் ஓ.  பன்னீர் செல்வத்திற்கு அனுமதி அளித்தால் பாதுகாப்பு தர தயார் என்று தெரிவித்திருந்தது.   இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்திருக்கிறார்.  அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது,    அதிமுகவின் கோயிலான தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.   அதிமுக அலுவலகத்திற்கு வருவதற்கு ஓபிஎஸ்க்கு எந்த முகாந்திரமும் இல்லை.  ஓபிஎஸ் வருகை என்பது சட்டவிரோதம் என்றார்.

 தொடர்ந்தது அது குறித்து பேசிய ஜெயக்குமார்,   சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.   அதிமுக அலுவலகத்தை  சூறையாடியவர்களை இன்னும் ஏன் கைது செய்யவில்லை  என்று கேள்வி எழுப்பினார்.

 ஓபிஎஸ் அதிமுகவின் பெயரை பயன்படுத்துவது தவறு.  அவர் அதிமுக உறுப்பினர் கூட இல்லை என்று குற்றம் சாட்டினார்.