×

சசிகலாவுடன் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா திடீர் சந்திப்பு.. அதிமுகவில் இணைகிறாரா சசிகலா??..

 

அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து ஓபிஎஸ் தீவிர ஆலோசனை நடத்தி வரும் நிலையில், அவரது சகோதரர் ஓ. ராஜா திடீரென சசிகலாவை சந்தித்திருக்கிறார்.

சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் படு தோல்வியை அடைந்திருக்கிறது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதனையடுத்து  அந்த தீர்மானத்தை  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை   நேரில் சந்தித்து   அதிமுக நிர்வாகிகள் வழங்கி, தங்களது விருப்பத்தை தெரிவித்ததாக  தகவல் வெளியானது.

 தொடர்ந்து நேற்றிரவு ஓபிஎஸ்ஸின் பண்ணை வீட்டில்  , முன்னாள் உணவுத்துறை அமைச்சர் புத்திச்சந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமைப்புச் செயலாளரும் , முன்னாள் தொலிலாளார் நலத்துறை அமைச்சருமான செல்லபாண்டியன் ஆகியோரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்பட்டது. இதனால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது.  இதனால் சசிகலா, மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.


 
அதிமுக  வட்டாரத்தில் நிலவி வரும் இந்த பரபரப்பான சூழலில் , அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா  நேற்று   சசிகலாவை சந்தித்தார். தென் மாவட்டங்களில் சசிகலா ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மக்கள் அவருக்கு  அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்தவகையில்  நேற்று திருச்செந்தூரில் வைத்து ஓ. ராஜா சந்தித்து பேசினார். தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.  ஒருபுறம் இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வரும் சூழலில் சசிகலாவுடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.