×

"அதிமுகவ பிடிச்ச சனி ஒழிஞ்சது.. இனி அமோகம் தான்" - மாஜி அமைச்சர் சூசகம்!

 

2019ஆம் ஆண்டிலிருந்து இரட்டை இலையுடன் ஒட்டியிருந்த தாமரை தற்போது பிரிந்துள்ளது. மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் என ஒன்றாக போட்டியிட்டு மண்ணை கவ்விய கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரிந்திருக்கிறது. இதற்கு பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு தான் காரணமா என சந்தேகம் எழுந்துள்ளது. போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், "சட்டமன்றத்தில் ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அதிமுகவைப் பார்க்க முடியவில்லை” என்றார்.

ஆனால் இது காரணமல்ல அடிப்படை அளவில் கட்சியை வளர்க்க இந்த முடிவு எடுத்திருப்பதாகவும் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறினார். இருப்பினும் 2024 மக்களவை தேர்தலில் மீண்டும் கூட்டணி அமைப்போம் என உறுதிப்படுத்தினார். அதேபோல கடந்த ஊரடக உள்ளாட்சி தேர்தலிலேயே பாமக கூட்டணியை முறித்துக்கொண்டது. எப்போது பாஜக பிரியும் என எதிர்பார்த்திருந்த அதிமுக தொண்டர்களுக்கு பாஜகவின் தனித்து போட்டி முடிவு உற்சாகத்தை உண்டாக்கியுள்ளது.

 பாஜகவால் அதிமுகவிற்கு சிறுபான்மையினர் வாக்கு கிடைக்கவில்லை என்ற எண்ணம் அக்கட்சி நிர்வாகிகளிடம் இருந்தது. தற்போது அந்த மன பாரம் விலகியுள்ளது. பாஜக கூட்டணி முறிந்தவுடன் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், "அதிமுகவில் உற்சாகமாக, சந்தோஷமாக இருக்கிறார்கள் எல்லோரும். பெரிய பாரம் நம்மைவிட்டு கொறஞ்சிருக்கு” என சூசகமாக கூறினார். தற்போது இதே பாணியில் முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியனும் பேசியுள்ளார். ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிமுகப்படுத்திவைத்தார்.

அப்போது பேசிய அவர், "நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை அதிமுக பெறவுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு உட்பட பல்வேறு விவகாரங்களில் ஆளுங்கட்சியை மக்கள் விமர்சனம் செய்யும் நிலையில் தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல், வழக்கமாக ஜாதகம் பார்க்கும்போது சனி, கேது என வேண்டாத கிரகங்கள் இருப்பதாக ஜோதிடர் கூறுவார். தற்போது அந்த வேண்டாத கிரகங்கள் (பாமக, பாஜக) எல்லாம் நம்மை பிரிந்த பிறகு, சுதந்திரமாக, நல்ல சகுணத்தில் தேர்தலைச் சந்திக்கிறோம். இதுவும் அதிமுகவுக்கு வெற்றிக்கு காரணம்" என்றார்.