×

ஓபிஎஸ்-இபிஎஸ் பதவி விலக வேண்டும் - பரபரப்பு போஸ்டர்

 

தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருக்கும் அதிமுக தொண்டர்கள் மீண்டும் தோல்வியை சந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால் அதிமுக- அமமுக இணைய வேண்டும்.  சசிகலா,  தினகரன் அதிமுகவிற்குள் வர வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியிருக்கின்றனர்.   தேனி மாவட்ட அதிமுகவினர் இதற்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறார்கள்.  

 சசிகலா, தினகரன் எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவிற்குள் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் தீர்மானம் நிறைவேற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்திடம் கொடுத்திருக்கிறார்கள்.

 இந்த நிலையில் தொடர் தோல்விக்கு காரணமான ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் கட்சியின் எதிர்கால நலன் கருதி பதவி விலக வேண்டும் என்று அதிமுகவினர் சில இடங்களில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர் . இதனால் அதிமுகவிற்குள் சலசலப்பு எழுருந்திருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டினம் ஒன்றியம் அதிமுகவினர் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர் வெற்றிவேல் என்பவர் இந்த போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறார் சின்னம்மாவின் உண்மை விசுவாசி என்ற பெயரில் இந்த போஸ்டர் எடுத்திருக்கிறார்.   அந்த போஸ்டரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட இயக்கம் , புரட்சித்தலைவி சின்னம்மா அவர்களால் பாதுகாக்கப்பட்ட இயக்கம் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் கட்சியை கைப்பற்றி தொடர் தோல்விக்கு காரணமான ஓபிஎஸ் -இபிஎஸ் கட்சியின் எதிர்கால நலன் கருதி பதவி விலக வேண்டும்.

 ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும்,கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி அடைந்துள்ளது.   புதுவை மாநிலத்தில் கட்சி அடியோடு காணாமல் போய்விட்டது.   அதேபோல தமிழகத்திலும் கட்சியை காலி செய்வதற்கு சிலர் சதி செய்து கொண்டிருக்கிறார்கள் .

சுமார் 50 லட்சம் தொண்டர்கள் கட்சியை விட்டு மாற்றுக் கட்சிக்கு சென்றுவிட்டதாகவும் சுமார் 50 லட்சம் தொண்டர்கள் எந்த கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலை வகிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவருகின்றன .   அம்மாவின் விசுவாசிகள் பொறுமை காக்க வேண்டும்.   சின்னம்மா அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கட்சியை ராணுவ கட்டுப்பாட்டுடன் வழிநடத்த வேண்டும் என்று அவர் அந்த போஸ்டரில் தெரிவித்திருக்கிறார்.