×

ஓபிஎஸ் வருகிறார்... ஆதரவாளர்கள் திடீர் ஆய்வு!

 

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் திடீரென்று திரண்டு வந்ததால் பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்தில் பதற்றம் ஏற்பட்டது.  பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நிலைமையை சமாளித்தனர்.

 சென்னை வானகரத்தில் நாளை அதிமுக பொதுக்குழு கூடுகிறது.  இந்த பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மன்றாடி வருகின்றனர் பன்னீர்செல்வம் தரப்பினர்.   இந்த பொதுக் குழுவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்திருந்த மனு நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. 

 பொதுக் குழுவிற்கு யாரும் போக வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.   ஆனால் பொதுக் குழுவிற்கு எல்லோரும் வாருங்கள்.  எதுவாக இருந்தாலும் அங்கே பேசிக்கொள்ளலாம் என்று கடிதம் எழுதியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.   இந்த பரபரப்பான சூழலில் இன்று மாலையில் பொதுக்குழு நடைபெறும் வானகரம் மண்டபத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

ஓபிஎஸ் ஆதரவாளரான வடசென்னை இளைஞரணி செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தான் பேரணியாக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு அதிமுகவினர் திரண்டு வந்திருந்தனர்.

 இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.   உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மண்டபத்தின் வாசலிலேயே அவர்களை தடுத்து நிறுத்தி,  எதற்காக நீங்கள் வருகிறீர்கள் என்று கேட்கவும்,  நாங்களும் அதிமுக நிர்வாகிகள் தான் நாங்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.   நாளை பொதுக்குழுவில் பங்கேற்க ஓபிஎஸ் வருகிறார்.  அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் விழா ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதைக் கவனிக்கத் தான் வந்திருக்கிறோம் .  அதுமட்டுமல்லாமல் இங்கே ஓபிஎஸ்க்கு எதிராக எதுவும் போஸ்டர்கள்,  கட் -அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்பதை கண்காணிக்கவும் வந்திருக்கிறோம் என்று அவர்கள் சொல்ல,  அதன்பின்னர்  மண்டபம் வரைக்கும் அவர்களை ஆய்வு செய்ய அனுமதித்தனர் போலீசார்.  ஆனால் மேடைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை.

 பேரணியின்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக விதிகளில் திருத்தம் செய்ய கூடாது என்று கோஷமிட்டனர் . பொதுக்குழுவில் கட்சி விதிகளை திருத்த கூடாது என்றும் கோஷம் எழுப்பினர்.  

 பொதுக்குழு நடைபெறும் பகுதியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.