‘’எங்கள் கால்களிலும் செருப்பு உள்ளது...’’
மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு தமிழக நிதி அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட்டபோது அவரின் கார் மீது செருப்பு வீசப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பின்னரே பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சொன்னதால் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இந்த ஆத்திரத்தில் தான் நிதி அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசப்பட்டு இருக்கிறது.
இந்த செருப்பு வீச்சு சம்பவத்திற்கு திமுக அமைச்சர்களும், எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும், நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காலணி வீசியதொடர்புடையவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையெனில் திமுக தொண்டர்கள் இதனை கையில் எடுக்க வேண்டி வரும்.
மதுரை விமான நிலையத்திற்கு வெளியே தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற வாகனத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு காலணி வீசி அநாகரிகமாகவும் அராஜகமாகவும் நடந்து கொண்ட செயல் கண்டிக்கத்தக்கது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்.
ஊரில் இருக்கின்ற அனைத்து ரவுடிகளை ஒரே கட்சியில் சேர்த்து விட்டால் என்ன நடக்கும் ?மதுரை சம்பவம் என்கிறார் மோகன் குமாரமங்கலம்.
அண்ணன் பிடிஆரின் வாகனத்தின் மீது, ரவுடிகளை வைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர். அமைதி பூங்காவான தமிழகத்தில் வன்முறைகளை தூண்டும் இவர்களின் உண்மையான முகத்தை தமிழக மக்கள் உணர வேண்டும் என்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் மீது நடந்த தாக்குதல் அநாகரீக அரசியலின் புதிய பரிணாமம். இந்த பரிணாமத்தை தமிழக அரசியலில் புகுத்தி இருப்பது பாஜக. இந்த போக்கை இப்போதே கடுமையாக எதிர்க்காமல் விட்டால் பாஜகவின் அநாகரீக அரசியல் எல்லை மீறி செல்லும் அபாயம் இருக்கிறது என்கிறார் ஜி . சுந்தர்ராஜன்.
ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்தச் சென்ற அமைச்சர் பிடிஆர் வாகனம் மீது செருப்பு வீசியுள்ளனர் பாஜகவினர். தேசியக் கொடி கட்டிய வாகனத்தின் மீது செருப்பு வீசுவதுதான் இவர்களின் தேசபக்தி? ரவுடிகளை கட்சியில் சேர்த்து தமிழ்நாட்டில் கலவரம் செய்யும் கும்பலை அரசு ஒடுக்க வேண்டும் என்கிறார் விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ்
மறைந்த ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்தச் சென்ற அமைச்சர் பிடிஆர் அவர்களின் கார் மீது காலணி வீசி அட்டூழியம் செய்த பாஜகவின் மலிவு அரசியல் அருவருக்கத்தக்கது. அமைச்சர் மீது தாக்குதல் நடத்தி அநாகரிகமாகச் செயல்பட்டவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுக நிர்வாகியாக இருக்கும் டாக்டர் மகேந்திரன்.
மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் மீது மற்றும் கான்வே மீதும் வன்முறை ஏவிவிட்ட பாஜக வின் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது.
வன்முறை மற்றும் அநாகரிகமாக நடந்து கொண்டவர்கள் மீது சட்ட விதிகுட்பட்டு கடுமையான தண்டனை தேவை என்கிறார் செந்தில்குமார் எம்.பி
எங்கள் கால்களிலும் செருப்பு உள்ளது என்பது அண்ணாமலை உணர்வார்! நாங்கள் போராடித்தான் அந்த செருப்பினை கூட எங்கள் கால்களில் போட உரிமை பெற்றோம் அப்படி பெற்ற உரிமையான செருப்பை உங்கள் மீது வீசி எங்கள் செருப்புகளை கொச்சைபடுத்த விரும்பவில்லை என்கிறார் தி.மு.க தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ்காந்தி.