"நான் இருப்பேனோ இல்லையோ.. ஆனா ஒருநாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராவார்" - ஒவைசி ஆவேச உரை!
இந்தியாவின் சிறப்புகளில் ஒன்று மத நல்லிணக்கம். பிற மதத்தவர்களை மதிக்கும் மாண்பும் அவர்களுடன் சகோதாரத்துவம் போற்றுவதும் இந்தியர்களுக்குண்டான தனிச்சிறப்பு. வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பதே அவர்களின் தனித்தன்மை. ஆனால் அந்த மத நல்லிணக்கம் அருகி வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதற்கு கர்நாடகாவில் அரங்கேறிவரும் ஹிஜாப் சர்ச்சையே காரணம். இந்தச் சர்ச்சை கடந்தாண்டு டிசம்பரே தொடங்கிவிட்டது.
உடுப்பி மாவட்டம் குண்டப்புராவிலுள்ள பியூ அரசுக் கல்லூரியில் தான் இது அரங்கேறியிருக்கிறது. ஹிஜாப் அணிந்துவந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதையடுத்து மாணவர்கள் மத அடையாளங்களைச் சுட்டிக்காட்டும் வகையிலான உடைகளை அணிந்துவரக் கூடாது என அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இவ்விவகாரத்தில் சிறுபான்மையின மாணவிகளுக்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அந்த வகையில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சித் தலைவரான ஒவைசி மிகவும் ஆவேசமாகப் பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோவை ட்விட்டரிலும் வெளியிட்டுள்ளார். அதில், "ஹிஜாப் அணிந்த பெண்கள் கல்லூரிக்கு செல்வார்கள். மாவட்ட ஆட்சியர்களாக, நீதிபதிகளாக, மருத்துவர்களாக, தொழிலதிபர்களாக ஒரு நாள் மாறுவார்கள். அதனை பார்க்க நான் உயிருடன் இல்லாமல் போகலாம். ஆனால் என் வார்த்தைகளை குறித்துவைத்து கொள்ளுங்கள். ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராவார்" என்று கூறியுள்ளார்.