×

மக்களவைக்கு ராகுல் காந்தியை தேர்ந்தெடுத்தது தவறு என்பதை இப்போது மாநில மக்கள் உணர்ந்துள்ளனர்.. கேரள முதல்வர் 
 

 

கேரளாவிலிருந்து மக்களவைக்கு ராகுல் காந்தியை தேர்ந்தெடுத்தது தவறு என்பதை இப்போது மாநில மக்கள் உணர்ந்துள்ளனர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருச்சூரில் இடதுசாரி தலைவர் அழகோடன் ராகவனின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பினராயி விஜயன் பேசுகையில் கூறியதாவது: ராகுல் காந்தி இங்கு போட்டியிட்டபோது, அவர் பிரதமராகப் போகிறார் என்ற நம்மவர்கள் நினைத்தார்கள். ஆனால் அது தவறு என்று மக்களுக்கு இப்போது தெரியும். காங்கிரஸின் அந்த தந்திரம் மீண்டும் இங்கு பலிக்காது. கேரளாவை சேர்ந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.பி.க்கள் தேசிய அளவில் பா.ஜ.க.வை  எதிர்க்கவில்லை. மக்களவையில் கேரளா தொடர்பான எந்த பிரச்சினையையும் அவர்கள் எழுப்பவில்லை. 

பகத் சிங் மற்றும் சந்திரசேகர் ஆசாத்துடன் இணைத்து சாவர்க்கரை சுதந்திர போராட்ட வீரராக சேர்க்க பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ஸூம் இப்போது முயற்சி செய்கின்றன. காங்கிரஸ் வைத்த  போஸ்டரில் ஆசாத்துடன் சாவர்க்கரின் படத்தை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரச்சாரத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டதை இது காட்டுகிறது. அதனால்தான்  எர்ணாகுளம் காங்கிரஸ்  சுதந்திர போராட்ட வீரர்கள் பட்டியலில் சாவர்க்கரை சேர்க்க முடிவு செய்தது. ஆங்கிலேயர்களுடன் போராட வேண்டிய அவசியமில்லை என்று இந்துக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தியது. ஆர்.எஸ்.எஸ். சுதந்திர போராட்டத்தில் ஒரு போதும் அங்கம் வகிக்கவில்லை, அவர்கள் எப்படியாவது கைது செய்யப்பட்டாலும், சாவர்க்கரின் உதாரணம் நமக்கு தெரியும். 

ஆர்.எஸ்.எஸ். ஆர்ஷ பாரத சம்காரம் பற்றி பேசுகிறது. ஆனால் அவர்கள் அதன்படி ஏதாவது பின்பற்றுகிறார்களா?. ஒரு பிரிவினர் நம் நாட்டின் எதிரிகளாக காட்டப்படுகிறார்கள், இது எந்த வேதங்களிலும் அல்லது புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதா?. அவர்கள் (பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.) அதை ஜெர்மனியின் ஹிட்லரிடமிருந்து பெற்றனர். ஆர்.எஸ்.எஸ். ஹிட்லரிடமிருந்து உத்வேகம் பெற்றது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவின் உள் அச்சுறுத்தல்கள் என்று கோல்வால்கர் எழுதினார். முசோலினியிடம் இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வடிவம் பெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.