"என்ன பயமா? உபி கேரளா போல் மாறினால்?" - யோகிக்கு பினராயி "நச்" பதிலடி!
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான தேதி அறிவிப்புக்கு முன்னரும் சரி பின்னரும் சரி மிகக் கடுமையான பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன. பஞ்சாப் தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களிலும் பாஜக தான் ஆளுகிறது. ஆகவே ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேச தேர்தல். பிரதமர் தேர்தலுக்கான மையப்புள்ளியே உபி தேர்தல் தான்.
இது ஒரு டிரெய்லர். மக்கள் மனதில் யாருக்கு இடம் என்பதை தெளிவாகக் கூறும் தேர்தல். ஆகவே நாடே உபி தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கியிருக்கிறது. பாஜக ஒருபடி மேலே சென்று எதிர்பார்க்கிறது. இதனால் பிரதமர் மோடி உட்பட அத்தனை பாஜக தலைவர்களும் உபியை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டனர். அங்கு முதற்கட்டமாக 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட 58 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. முன்னதாக நேற்று மக்களிடம் காணொலி வாயிலாக முதலமைச்சர் யோகி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், "5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நிறைய அற்புதங்கள் நடந்துள்ளன. இனிதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எனது முயற்சிக்கு கிடைக்கும் ஆசீர்வாதமே உங்கள் வாக்கு. அதுதான் உங்கள் அச்சமற்ற வாழ்க்கைக்கு உத்தரவாதம். ஒருசிலர் உபியில் ஆட்சியை நிறுவ முயல்கிறார்கள். அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலோ, வாக்கு செலுவத்தில் இருந்து கொஞ்சம் தவறினாலோ இந்த ஐந்தாண்டுகள் நான் செய்த உழைப்புகள் கெட்டுவிடும். காஷ்மீர், கேரளா மற்றும் மேற்குவங்கம் போல உத்தரப் பிரதேசம் போல மாறிவிடும்" என்றார்.
உபியை ஒப்பிடுகையில் கேரளா பன்மடங்கு வளர்ந்த மாநிலம். மக்களின் வாழ்க்கைத்தரம், சுகாதாரம், கல்வி என அனைத்திலும் மேம்பட்ட மாநிலம். ஆனால் யோகி இப்படி கூறியது அம்மாநில மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் பினராயி, "யோகி பயப்படுவது போல் உத்தரப் பிரதேசம், கேரளாவாக மாறினால், மக்களால் சிறந்த கல்வி, சுகாதார சேவைகள், சமூக நலம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை பெறமுடியும். மேலும், மதம் மற்றும் சாதியின் மக்கள் கொல்லப்படாத ஒரு நல்லிணக்கமான சமுதாயமாக மாறும். அதைத்தான் உபி மக்களும் விரும்புவார்கள்" என நச் பதிலடி கொடுத்துள்ளார்.