×

இப்போது யாராவது தவறு செய்தால், ஏஜென்சிகள் தங்கள் கடமையை செய்யும்.. கார்கேவுக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர்

 

இப்போது யாராவது தவறு செய்தால், ஏஜென்சிகள் (அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை போன்ற அமைப்புகள்) தங்கள் கடமையை செய்யும் என்று மல்லிகார்ஜூன்  கார்கே குற்றச்சாட்டுக்கு பியூஸ் கோயல் பதிலடி  கொடுத்தார்.

நேஷனல் ஹெரால்டு தொடர்பான பண மோசடி வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு  அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று காலையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில், நான் மதியம் 12.30 மணிக்கு அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும். நான் சட்டத்தை பின்பற்ற விரும்புகிறேன். ஆனால் இந்த நேரத்தில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடுவில் என்னை அழைப்பது சரியானதா? என்று குற்றம் சாட்டினார்.

மல்லிகார்ஜூன் கார்கே குற்றச்சாட்டுக்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பதிலடி கொடுத்தார். இந்த விவகாரத்தில் பியூஸ் கோயல் கூறுகையில், எந்தவொரு சட்ட அமலாக்க அமைப்பின் பணியிலும் அரசாங்கம் தலையிடாது. ஒருவேளை அவர்களின் (காங்கிரஸ்) ஆட்சியில் அது நடந்து இருக்கலாம். இப்போது யாராவது தவறு செய்தால், ஏஜென்சிகள் (அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை போன்ற அமைப்புகள்) தங்கள் கடமையை செய்யும் என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டில், நேஷனல்  ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதில் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக  சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் பவன் குமார் பன்சால் உள்ளிட்ட காங்கிரஸின் முக்கிய தலைகளில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. கடந்த சில தினங்களுக்கு யங் இந்தியா நிறுவன அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை சீல் வைத்தது.