ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்..திருமாவின் கையைப்பிடித்து சொன்ன அகிலேஷ் யாதவ்
டெல்லியில் கட்டப்பட்ட திமுகவின் தலைமை அலுவலகத்திற்கு நேற்று மாலையில் திறப்பு விழா நடைபெற்றது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
பின்னர் தாஜ் ஹோட்டலில் இருந்து அமைச்சர் எ.வ.வேலு சிற்றுண்டி வரவைத்திருக்கிறார். சோனியா, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, திருமாவளவன் உள்ளிட்ட பலரும் இந்த டின்னரில் பங்கேற்றுள்ளனர்.
சமீப காலமாக வெளி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத சோனியாகாந்தி, திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றது மட்டுமல்லாது, சில மணி நேரங்கள் அங்கேயே இருந்து செலவிட்டுள்ளார்.
டின்னரில் எல்லோரும் பொதுவாக பேசிக்கொண்டிருந்தபோது, திருமாவளவன் அரசியல் குறித்து சீரியஷாக பேசியிருக்கிறார். தனக்கு எதிரே அமர்ந்திருந்த அகிலேஷ் யாதவை பார்த்து திருமாவளவன் பேசியது தான் சூடு பிடித்திருக்கிறது.
‘’மீண்டும் பிஜேபி ஆட்சி அமைந்து விட்டால் மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் அதை தடுக்க முடியும் . நீங்கள் நினைத்திருந்தால் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். நீங்கல் முதல்வர் ஆகி இருப்பீர்கள். காங்கிரசுடன் கூட்டணி உறுதிப்படுத்தி மற்ற கட்சிகளை இணைத்திருந்தால் உத்தரபிரதேசத்தில் நீங்கள் முதல்வர் ஆகி இருக்க முடியும். அதன் மூலமாக இந்தியா முழுவதும் ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் துரதிஷ்டவசமாக நீங்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த வில்லை’’ என்று சொல்லிக் கொண்டே போக , சட்டென்று எழுந்த அகிலேஷ் யாதவ், திருமாவளவன் கைகளை பிடித்துக்கொண்டு, ‘’ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்’’ என்று சொல்லியிருக்கிறார்.
திருமாவளவன் அப்படி பேசிய பின்னர்தான் மற்ற தலைவர்களும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் . அதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள்.