×

 ‘’தலைவர் என்னை பார்த்து அப்படி பேசாதீங்கன்னு சொல்லிட்டார்’’

 

பெண்கள் பேருந்துகளில் ஓசியில் பயணம் செய்வதாக அமைச்சர் பொன்மொழி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.  அமைச்சர் பொன்முடி  பேச்சுக்கு கண்டனங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.  அமைச்சர் பொன்முடி செல்லும் கார்,  வீடு எல்லாமே ஓசியில் தான்.   ஆனால் அவரோ எஜமானர்கள் ஆகிய மக்களை பார்த்து ஓசியில் பயணம் செய்கிறார்கள் என்று எப்படி சொல்லலாம் என்று கண்டனங்கள் வலுத்து வருகின்றன

 முதலமைச்சர் ஸ்டாலினும் இதனால் கடுப்பாகி பொன்முடியை கண்டித்து இருக்கிறார்.  இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி,  தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் .

  திமுகவின் தலைவராக மு. க. ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது.  வியர்வைக்கு வெகுமதி என்கிற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் இந்த பாராட்டு விழா நடந்தது .  இதில் முதல்வர் மு. க. ஸ்டாலின்,   திராவிடர் கழகத் தலைவர்  வீரமணி , அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

 இதில் அமைச்சர் பொன்முடி பேசிய போது,   ’’வாயா போயா என்கிற வார்த்தையை சொல்லவே பயமா இருக்குது .  தலைவர் என்னை பார்த்து அப்படி பேசாதீர்கள் என்று சொல்லிவிட்டார்.    நான் சொன்னதை பாஜகவினர் டார்கெட் செய்து தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.   திமுக ஆட்சியில் வேறு எதை வைத்து அரசியல் செய்ய முடியும்?  நான் சொன்ன ஒரே ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு அரசியல் செய்கிறார்கள் . 

முதல்வர் இது போல பேச வேண்டாம் என எனக்கு அறிவுறுத்தி இருக்கிறார் . சகஜமாக பேசிய ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு இந்த அளவிற்கு அரசியல் செய்கிறார்கள்.   உண்மையில் நான் பேசியது யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.  வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.