×

அதிகாரம்! பலம் அறியாமல் பேசிவிட்டாரா துரை வைகோ?
 

 

ஆட்சி அதிகாரத்தை நோக்கியே நம் பயணம் இருக்கவேண்டுமென்று துரை வைகோ பேசியது திமுக - மதிமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ கடந்த சில தினங்களுக்கு முன்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடந்த கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியபோது,  ‘’இதுவரைக்கும் நாம் செய்தது மக்களுக்கான அரசியல்.  இனி நாம் செய்யப்போவது நமக்கான அரசியல்.  மதிமுகவின் அரசியல்’’ என்று சொன்னவர்,  ’’அதிகாரம் இல்லாமல் இங்கு எதையும் சாதிக்க முடியாது.  அதிகாரத்தை நோக்கிய நமது பயணம் இருக்க வேண்டும்.  இன்னும் இரண்டு ஆண்டுகள் எனக்கு கொடுங்கள்.  நான் சொல்வதை செய்யுங்கள் .  நிச்சயம் நமக்கு மறுமலர்ச்சி ஏற்படும்’’ என்று பேசியிருக்கிறார்.

 அவர் மேலும் தனது பேச்சில்,   ’’ஐம்பதாயிரம் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் போட வேண்டாம்.  அதற்கு பதிலாக மக்களுக்குப் பயன்படுகின்ற விஷயங்களை செய்யுங்கள்.   கட்சியை வைத்து உங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் உங்கள் செல்வாக்கை வைத்து கட்சிக்கு புது ஆட்களை கொண்டு வாருங்கள்.  இதுதான் கட்சியை வளர்க்கும் ஒரே நடைமுறை.  உழைப்பதற்கு நான் தயார் நீங்களும் தயாராகுங்கள்.  உண்மையாக உழைப்பவர்களுக்கு அங்கீகாரத்தையும் அவர்களுக்கான பதவியையும் வாங்கித்தருவதுதான் என் முக்கிய வேலை’’ என்று பேசியிருக்கிறார்.

 அதிகாரம் வேண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று என்ற நோக்கத்திலேயே துரை வைகோ பேசியிருப்பது,  திமுக கூட்டணியில் இருந்து இவ்வாறு பேசியிருப்பது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   அதுமட்டுமல்லாமல் கட்சியின் பலம் அறியாமல் அதிகாரம் குறித்து அவர் பேசியிருப்பது திமுக வட்டாரத்தில் விமர்சிக்கப்படுகிறது.