அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக அமைதியான போராட்டத்தை நடத்துங்கள், ஆனால் நிறுத்த வேண்டாம்.. பிரியங்கா காந்தி
அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக அமைதியான போராட்டத்தை நடத்துங்கள், ஆனால் நிறுத்த வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களிடம் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய இளைஞர்களை ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணியமர்த்துவதற்கான மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் கடந்த 14ம் தேதி அங்கீகரிக்கப்பட்டது. பல மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர், எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை கை விட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
பல மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக ரயில் எரிப்பு மற்றும் பொது சொத்துக்கள் நாசம் போன்ற சம்பவங்கள் அரங்கேறியது. அதேசமயம், இளைஞர்களின் சமாதானம் செய்யும் நோக்கில் அக்னிபாத் ஆட்சேர்ப்பு திட்டத்தில் பல சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக அமைதியான போராட்டத்தை நடத்துங்கள், ஆனால் நிறுத்த வேண்டாம் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், ஆட்சேர்ப்பு திட்டம் (அக்னிபாத்) நாட்டின் இளைஞர்களை கொல்லும், ராணுவத்தை அழிக்கும். தயவு செய்து இந்த அரசாங்கத்தின் நோக்கத்தை பாருங்கள் மற்றும் அதை கவிழுங்கள். தேசத்துக்கு உண்மையுள்ள மற்றும் நாட்டின் சொத்துக்களை பாதுகாக்கும் அரசாங்கத்தை கொண்டு வாருங்கள். அமைதியான போராட்டத்தை நடத்துங்கள், ஆனால் நிறுத்த வேண்டாம் என தெரிவித்தார்.