×

முந்தைய அரசுகள் ரூ.3 லட்சம் கோடி கடனை விட்டு சென்றுள்ளன... பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குற்றச்சாட்டு

 

பஞ்சாப் மீது முந்தைய அரசுகள் ரூ.3 லட்சம் கோடி கடனை விட்டு சென்றுள்ளன, நாங்கள் அதை விசாரித்து மீட்டெடுப்போம் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசாங்கம் ஆட்சி செய்து வருகிறது. பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் நடவடிக்கையில் ஆம் ஆத்மி அரசு ஈடுபட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார். தற்போது முந்தைய அரசுகள் விட்டு சென்ற ரூ.3 லட்சம் கோடி கடன் சுமை குறித்து விசாரித்து மீட்டெடுப்போம் என பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி பிரிவு மாநில முதல்வர் பகவந்த் மான் கூறியதாக டிவிட்டரில், பஞ்சாப் மீது முந்தைய அரசுகள் ரூ.3 லட்சம் கோடி கடனை விட்டு சென்றுள்ளன. ஆனால் இது எங்கே பயன்படுத்தப்பட்டது?. நாங்கள் விசாரித்து மீட்டெடுப்போம். ஏனென்றால் இது மக்களின் பணம் என்று பதிவு செய்துள்ளது. பஞ்சாப் முதல்வரின் இந்த பேச்சு காங்கிரஸ் மற்றும் அகாலி தளம் கட்சியினருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன், ஆம் ஆத்மியின் பிரபல தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா, பஞ்சாபை முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் அகாலிதளம்-பா.ஜ.க. கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் மற்றும் பாதல் அரசாங்கங்கள் பஞ்சாபை கடந்த 50 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி கடனாளியாக மாற்றியுள்ளன. 3 கோடி மக்கள் தொகையுடன் இன்று பஞ்சாபில் ஒவ்வொரு தனிநபரும் ரூ.1 லட்சம் கடன் வைத்திருக்கிறார்கள் என ராகவ் சதா குற்றம் சாட்டி இருந்தார்.