×

குஜராத்தில் நாங்கள் பூஜ்ஜியத்திலிருந்து 5க்கு வந்துள்ளோம். எனவே நாங்கள் தோற்கடிக்கப்படவில்லை... பகவந்த் மான் 

 

குஜராத்தில் நாங்கள் பூஜ்ஜியத்திலிருந்து 5க்கு வந்துள்ளோம். எனவே நாங்கள் தோற்கடிக்கப்படவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பகவந்த் மான் தெரிவித்தார்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது ஆம் ஆத்மி கட்சி. அந்த  கட்சியினர் குஜராத்தில் ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்து வந்தனர். ஆனால் குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பகவந்த் மான், குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மியின் தோல்வி, டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி ஆகியவை குறித்து மனம் திறந்து பேசினார். பகவந்த் மான் கூறியதாவது: குறைந்தபட்சம் எழுத்துப்பூர்வமாக கொடுக்கும் தைரியம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இருக்கிறது. நாங்கள் காங்கிரஸை போல களத்தை வெளியேறாமல் கடுமையாக உழைக்கிறோம். 

பஞ்சாபிலிருந்து குஜராத்துக்குள் நுழைவதை குறித்துள்ளோம். இப்போது ஆம் ஆத்மி கட்சி ஒரு  தேசிய கட்சி. ஆம் ஆத்மி கட்சிக்கு குஜராத்தில் 13 சதவீத  வாக்குகள் கிடைத்துள்ளது. நாங்கள் பூஜ்ஜியத்திலிருந்து 5க்கு வந்துள்ளோம். எனவே நாங்கள் தோற்கடிக்கப்படவில்லை. மூன்று தேர்தல்களில் (குஜராத், இமாச்சல பிரதேசம் மற்றும் டெல்லி மாநகராட்சி) ஒரே ஒரு தேர்தலில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றது. இமாச்சல பிரதேசம் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியடைந்துள்ளது. 

இந்த (ஆம் ஆத்மி) கட்சி வேறு எந்த கட்சியிலிருந்தும் வெளியே வந்தவரால் உருவாக்கப்பட்டதல்ல. நாட்டுக்கு சேவை செய்ய விரும்பும் சாமானியர்களுக்கு கட்சி வழி வகுத்தது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இருந்து உருவானது ஆம் ஆத்மி கட்சி. அது ராம்லீலா மைதானத்தில் இருந்து வெளிப்பட்டது. பொதுமக்கள் உங்களுக்காக போராட தொடங்கும்போது உங்களை யாராலும் தோற்கடிக்க (டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி) முடியாது. இந்திய வரலாற்றில் ஆம் ஆத்மியை போல் வேகமாக வளரும் கட்சி எதுவும் இல்லை. குஜராத்தில் நாங்கள் தோல்வியடைந்தாலும் மாநிலத்தில் கடுமையாக உழைத்ததில் நாங்கள் எந்த வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. விராட் கோலி கூட தினமும் சதம் அடிப்பதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.