×

எனது தலைவிதியை பிரதமர் மோடி தீர்மானிப்பார்.. மத்திய அமைச்சர் ஆர்.சி.பி. சிங்
 

 

எனது தலைவிதியை பிரதமர் மோடி தீர்மானிப்பார் என மத்திய அமைச்சர் ஆர்.சி.பி. சிங் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மத்திய அமைச்சர் ஆர்.சி.பி. சிங்குக்கு அவர் சார்ந்த கட்சியான ஐக்கிய ஜனதா தளம் டிக்கெட் கொடுக்க மறுத்து விட்டது. மேலும், மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளராக கீரு மஹ்தோவை ஐக்கிய ஜனதா தளம் பரிந்துரை செய்தது. இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் வாய்ப்பு அளிக்காதது குறித்து ஆர்.சி.பி. சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது தலைவிதியை பிரதமர் நரேந்திர மோடி தீர்மானிப்பார். தற்போது கட்சியும், எங்கள் தலைவர் நிதிஷ் குமாரும் என்னை அமைச்சர் பதவியில் இருந்து விலகச் சொல்லவில்லை. தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் ஜூலை 6ம் தேதியுடன் முடிவடைகிறது.

டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளேன். மோடியின் முடிவே இறுதியானது. என்னை மத்திய அமைச்சராக தக்கவைக்க அவருக்கு சிறப்பு சலுகை உள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங்குடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, போட்டியும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.