ஏழைகளின் வீடுகளை இடிப்பது எளிது மோடி ஜி.. தைரியம் இருந்தால் சீன மொபைல் டவர்களை இடியுங்க.. ராஷ்டிரிய ஜனதா தளம்
நாட்டு ஏழைகளின் வீடுகளை இடிப்பது எளிது மோடி ஜி, உங்களுக்கு தைரியம் இருந்தால் இந்த மொபைல் டவர்களில் புல்டோசரை இயக்கி காட்டுங்கள் என ராஷ்டிரிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு மிக அருகில் சீனா 3 மொபைல் டவர்களை நிறுவியுள்ளதாக வெளியான செய்தி மற்றும் மத்திய பிரதேசம் மற்றும் டெல்லியில் வன்முறை பாதித்த இடங்களில் புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டது குறித்தும் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. அரசை ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சனம் செய்தார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. தேஜஸ்வி யாதவ் டிவிட்டரில், நமது எல்லையில் இரண்டு கிராமங்களை சீனா குடியமர்த்தியுள்ளது. புல்டோசர்களை மறந்து விடுங்கள். அதை (சீன கிராமங்கள்) பற்றி இரண்டு வார்த்தை கூட பேச துணிவதில்லை. ஜாதி, மதம் பார்த்து தான் புல்டோசர் ஓட்டுவார்களா அல்லது தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, அரசியலமைப்பு பற்றி கவலைப்படுவார்களா? சட்டவிரோத கட்டுமானம் இருந்தால், பிறகு இத்தனை ஆண்டுகளாக அரசு என்ன செய்து கொண்டிருந்தது? என பதிவு செய்து இருந்தார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், சீன கட்டுமானத்தின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ததோடு, நம் நாட்டின் ஏழைகளின் வீடுகளை இடிப்பது எளிது மோடி ஜி, உங்களுக்கு தைரியம் இருந்தால் இந்த மொபைல் டவர்களில் புல்டோசரை இயக்கி காட்டுங்கள். உங்கள் சீன நண்பர்கள் நம் நிலத்தில் எழுப்பியுள்ளனர். நீங்கள் பெயரை கூட சொல்ல துணியாத அதே சீனர்கள் என பதிவு செய்துள்ளது.