×

ஆம் ஆத்மி ஆட்சிக்கு குஜராத் மக்கள் தயாராக இருக்கிறார்கள்.. ராகவ் சதா நம்பிக்கை 

 

ஆம் ஆத்மி ஆட்சிக்கு குஜராத் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான ராகவ் சதா குஜராத்தில் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றார். மேலும் கட்சி தொண்டர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் உரையாடினார். சந்திப்புகளின்போது ராகவ்  சதா  பேசுகையில் கூறியதாவது: இன்றைய சூரத் மக்களின் உற்சாகமான பதிலை பார்த்தாலே குஜராத்தின் மனநிலையை புரிந்து கொள்ளலாம். ஆம் ஆத்மி ஆட்சிக்கு குஜராத் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க. போலி சர்வே செய்கிறது. உளவுத்துறை ஆளும் கட்சிக்கு ஒரு உள் ஆய்வு அறிக்கையை அளித்துள்ளது, அது ஆளும் கட்சிக்கு பதற்றத்தை மற்றும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் குஜராத் மக்கள் ஆம் ஆத்மியை மாற்றத்தின் முகவராக பார்க்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆம் ஆத்மி கட்சி அந்த பொறுப்பை ஏற்க தயாராக உள்ளது. 

கடந்த 27 ஆண்டுகளாக மாநிலத்தை ஆளும் பா.ஜ.க.வை வேரோடு பிடுங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பது மாநிலத்துக்கு செழிப்பு மற்றும் நல்வாழ்வு சகாப்தத்தை கொண்டு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். குஜராத் சட்டப்பேரவை புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.